நூலுக்கு அருகில் சில ஆயிரம் ரூபாய் தாள்கள் -அதிர்ச்சித் தகவல்
கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல் எரிவாயு சிலண்டர்களும் பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
நான்கு சிலிண்டர்களே இவ்வாறு குண்டுடன் இணைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொச்சிக்கடையில் இன்றைய தினம் வெடித்து சிதறிய குண்டு நூல் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த நூலுக்கு அருகில் சில ஆயிரம் ரூபாய் தாள்களும்போடப்பட்டிருந்தன.
அந்த காசுத் தாள்களை எடுக்க முயற்சிக்கும் போது குண்டு வெடிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை நன்கு விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் வீதியில் நடமாடும் போது இவ்வாறான காசுத்தாள்களோ, பெறுமதியான ஏதேனும் பொருளோ வீதியில் கிடக்குமாயின் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றை மக்கள் காண நேர்ந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிப்பது சிறந்தது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது