நீதிபதிக்கு எதிராக கட்சிகள் எதிர்பை வெளியிடுவது துரதிஷ்டவசமானது: உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுவது துரதிஷ்டவசமானதென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் இத்தகைய கருத்துகளை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபரின் உதவியையும் நீதிமன்றம் நாடியுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யும் வகையில், அவருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றப்பிரேரணையை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சம்பந்தப்பட்ட நீதிபதியின் நீதிமன்றப் பணிகளை பாதிக்கும் என்பதால் அது தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு அனுமதியளிக்க கூடாதென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்துள்ள குற்றப்பிரேரணையை ஏற்பதா? இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை நாடவுள்ளார்.

வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம், நீதித்துறை மீதான நம்பகத்தன்மை குறைவடைதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாகவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நேற்று கூடிய எதிர்க்கட்சிகள் ராஜ்யசபா தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் குற்றப்பிரேரணையை கையளித்தனர்.

கடந்த காலங்களில் இது போன்ற குற்றப்பிரேரணையை தாக்கலின் போது 3 அல்லது 13 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !