நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வருகை: தி.மு.க.வினர் உற்சாகம்

உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை வேகமாக தேறி வருகிறது. முதலில் தன்னை சந்திக்க வருவோரை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின்னர் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தன்னைச் சுற்றியிருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்.

தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்தார். உறுப்பினர் படிவத்தில் சரியான இடத்தில் கட்டத்துக்குள் கையெழுத்தை போட்டு அனைவரையும் வியக்க வைத்தார்.
சமீபத்தில் பிரதமர் மோடி, கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தபோது, அவரை வெளியே அழைத்து வந்தனர். வாசலில் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார். இதனால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வந்தார். அவருடன் செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் 20 நிமிடம் அறிவாலயத்தைப் பார்வையிட்ட அவர், கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார். கட்சி தலைமை அலுவலகத்திற்கு கருணாநிதி வந்ததால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !