நிரந்தரத் தீர்வு மட்டுமே இந்தியாவின் எதிர்பார்ப்பு ரணிலுடனான சந்திப்பின்போது மோடி எடுத்துரைப்பு

இலங்கையில் சகலஇன மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையான நிரந்தரத் தீர்வை மட்டுமே இந்தியா எதிர்பார்க்கிறது. எமது நீண்டநாள் விருப்பமும் அதுவே என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணிலுக்கும் இந்தியப் பிரமர் மோடிக்கும் இடையில் ஹைதராபாத் ஹவுஸில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே பிரதமர் மோடி இவ்வாறு எடுத்துரைத்துள்ளார்.

அங்கு அவர், இலங்கையில் நடந்த நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கைக்கு இப்போது அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுவது இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றே. இலங்கையில் வசிக்கும் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நிரந்தரத்தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும். புதிய அரசமைக்கு எழும் சவால்களைக் கண்டு அஞ்சாமல் அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இந்தப் பேச்சின்போது இலங்கையின் புதிய அரசமைப்புத் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் பொருளாதார மேம்பாட்டுக்கான எட்கா ஒப்பந்தம் மற்றும் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி, தொழில்நுட்பம், ஆகிய துறைகளில் இலங்கைக்கு இந்தியா உதவி வழங்குவது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, மீனவர் விவகாரம் ஆகியவை தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்தனர் எனவும் கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !