நியூயோர்க்கில் மரிஜுனா போதைப்பொருளை சட்டபூர்வமாக்க நடவடிக்கை!

பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக மரிஜுனா போதைப்பொருளை சட்டபூர்வமாக்குவதற்கு புத்தாண்டில் முன்னுரிமை வழங்குவதாக, நியூயோர்க் ஆளுநர் அன்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பத்து மாநிலங்கள் மற்றும் கொலம்பிய மாவட்டத்தில் மரிஜுனா பாவனை ஏற்கனவே சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பட்டியலில் நியூயோர்க்கையும் இணைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”நாம் இரண்டு குற்றவியல் நீதி அமைப்புகளை கொண்டிருக்கிறோம். ஒன்று செல்வந்தர்களுக்கானது மற்றையது அனைவருக்குமானது. ஆனால், அந்த அமைப்பு தற்போது முடிவுக் கொண்டுவரப்படவுள்ளது. நாம் தேவையற்ற மற்றும் நியாயமற்ற குற்றவியல் முறைகளை நீக்கவேண்டும். அதற்கமைய பொழுதுபோக்கிற்காக வயது வந்தோருக்கான மரிஜுனா பாவனை சட்டபூர்வமாக்ககப்படவுள்ளது.

ஒரு ஜனநாயகவாதி என்ற அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்துவதே எமது நிலைப்பாடு. ஒரு ஜனநாயகம் கொண்ட செனட் சபையையும், சட்டமன்றத்தையும் நாம் கொண்டிருக்கிறோம். அதனை கொண்டு இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மரிஜுனா பாவனையை சட்டபூர்வமாக்கப்படுவதன் மூலம் 1.3 அமெரிக்க டொலர் வருடாந்த வரி வருவாய் பெற்றுக் கொள்ள முடியும் என ஆளுநரால் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !