நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் சந்திப்பு
நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் 15-ந்தேதி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயத்துடன் உயிர் தப்பினர்.
அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இங்கிலாந்து இளவரசர் வில்லியம் நியூசிலாந்து சென்றார்.
நேற்று மதியம் கிறிஸ்ட் சர்ச்நகரை சென்றடைந்த அவர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார்.
குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆலன் அல்ஸ்டாமி என்ற 5 வயது சிறுமியை சந்தித்து அவளிடம் உடல் நலம் விசாரித்தார்.
அப்போது அவள் இளவரசர் வில்லியமிடம் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? என கேட்டார். அதற்கு அவர் ஆம். எனக்கு ‘சார்லோட்’ என்ற மகள் இருக்கிறாள். அவளுக்கும் உனது வயதுதான் இருக்கும் என பதில் அளித்தார்.
தனது 93 வயது பாட்டி ராணி எலிசபெத்தின் வேண்டுகோளின் படி இங்கு வந்து துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக அவர் தெரிவித்தார். அவருடன் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர் டெர்னும் உடன் வந்து இருந்தார்.