நியூசிலாந்துக்கு இது ஒரு இருண்ட நாள்: பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில்  இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் நியூஸிலாந்திற்கு இது ஒரு இருண்ட நாள் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு கொடூரமான வன்முறை; பல உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நியூசிலாந்து பிரஜை ஆவார்.  இது ஒரு தீவிர வலதுசாரி வன்முறை என  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிந்திய நியூஸிலாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் கைது (2ஆம் இணைப்பு)

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காணப்படும் நபர் பொலிஸ் வாகனத்தை மோதியுள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட நாலு பேர் அடங்குகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் குற்றவாளிகள் வெளியேறாத வகையில் குறித்த பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது என வெலிங்கடன் பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் தொடக்கம் 27 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதோடு 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் இவ்விரு மசூதிகளும் அமைந்துள்ள ஹாக்லி பார்க்கில் இருந்த நிலையில் கிரிக்கட் வீரர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில்  மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது.  இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில்  110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் உட்பட சுமார் 300 பேர் இவ்விருமசூதிகளும் அமைந்துள்ள ஹாக்லி பார்க்கில் இருந்ததாகவும் எவ்வாறாயினும் கிரிக்கட் வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை சம்பவ இடத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுமார் 20 துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்க முடிந்தது. மக்கள் பின்புறமாக ஓடிக்கொண்டிருந்தனர். அதன்பின்னர் பொலிஸார் வருவதை அவதானிக்க முடிந்தது என சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச்  பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம்  உள்ளதோடு இதன் அருகிலேயே சென்ட்ரல் கிறிஸ்ட் பாடசாலை , சென்ட்ரல் கிறிஸ்ட் மருத்துவமனை,அல் நூர் மசூதி மற்றும் லைன்வுட் மஸ்ஜித் மசூதி என்பன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !