நாவலரின் 200ஆவது நூற்றாண்டு விழா- அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!
நாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆறுமுக நாவலர் பெருமானின் 200ஆவது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முக்கிய அம்சமாக 192ஆவது குருபூசை தினத்தையும் கருத்திற்கொண்டு, நாவலர் பிறந்த மண்ணில் இன்றைய தினம், பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு பூராகவும் இருக்கின்ற அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, நூலகம் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதா நாத் காசிலிங்கம், நந்திக்கொடி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை பிரதமரின் அறிவித்தலின் மூலம் 200 ஆவது நூற்றாண்டு விழாவுக்கு அவர் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதும் நாவலரின் 200 ஆவது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.