நாளை போராட்டத்துக்காக டெல்லியில் ஒன்றிணையும் விவசாயிகள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து, டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.

விவசாய பொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்குதல், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தல், அனைத்து நதிகளையும் இணைத்தல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லி சென்றுள்ள தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ரயிலை மறித்த அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.

பின்னர் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து ராம்லீலா மைதானம் வரையில், மண்டை ஓடுகள், எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !