நான்குக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய தாய்மாருக்கு வருமான வரி விலக்கு

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியின் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் சாராசரியைவிட ஹங்கேரியில் குறைவாகும்.

இந்தநிலையில் நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபின்னர் இது ரத்து செய்யப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரிய மக்கள் வித்தியாசமாக நினைக்கிறார்கள் எனத் தெரிவித்த அவர், தங்களுக்கு மக்கள்தொகை என்பது எண்களாக தேவையில்லை எனவும் ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை எனவும் தெரிவித்துள்ளர்h. அந்நாட்டின் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !