நான்காவது நாளாகவும் தொடரும் அரச ஊழியர்களின் போராட்டம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நான்காவது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

சம்பளம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தை வலுப்படுத்தும் அடுத்தகட்ட போராட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி மதுரையில் நடைபெறுமென ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் அரசு தங்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை மேற்கொண்டாலும் போராட்டத்தை கைவிடபோவதில்லையென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம், தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டன

இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரச ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும், 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதமையால் தொடர் போராட்டங்களை அரச ஊழியர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !