நாட்பட்ட சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் காணப் படுவதாக எச்சரிக்கை

சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் ஏற்பட்ட மாசுபாட்டின் அளவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு சபை விதித்த தரக் கட்டுப்பாட்டைவிட ஓரளவு அதிகரித்துள்ளது.

குடியிருப்பு, வணிகப் பகுதிகளில் 100 மைக்ரோகிராம்களுக்கு அதிகமாக மாசுத் துகள்கள் காற்றில் கலக்காமல் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு சபை அறிவுறுத்தியிருந்தது.

பொதுவான நாட்களில் காற்றில் இருக்கும் மாசை விட, தீபாவளியன்று அதிகப் பட்டாசுப் புகை காரணமாக ஏற்படும் காற்று மாசு அபாய அளவை எட்டும் எனவும் அந்த சபை எதிர்வு கூறியிருந்தது.

அதன்படி நேற்று(புதன்கிழமை) மாலை 4 மணியளவில் வெளியான அறிக்கையில் காற்று மாசுத் துகள்களின் அளவு குறைந்து 89 ஆக இருந்தது. இதற்கு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் 4 மணிக்குப் பின்னர் மாலை மற்றும் இரவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், காற்றில் கலந்திருந்த மாசுத் துகள்களின் அளவு அதிகரித்துள்ளது.

அதன்படி அதன் அளவு 121 ஆக உயர்ந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் கர்நாடகாவில் உள்ள சிக்கபல்லாபூர் என்னும் மாவட்டத்தில் மட்டுமே மிகவும் குறைவான அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் வட இந்திய நகரங்களான லக்னோ, முஸாபர் நகர், மொரதாபாத், கொல்கத்தா, பாட்னா ஆகியவற்றில் காற்று மாசுபாடு மிகவும் மோசமாக, அபாயகரமான சூழலை எட்டியது.

இதனால் நாட்பட்ட அளவில் சுவாச நோய்கள் ஏற்படும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !