நாடு திரும்பிய ஜேர்மன் ஜிகாதி பெண்கள் கைது செய்யப்படுவார்களா?

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த ஜேர்மானிய பெண்கள் இருவர் தங்களது பிள்ளைகளுடன் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த ஜிகாதி பெண்களை கைது செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்ட போது, அதை நீதிமன்றம் முறியடித்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமானது அமெரிக்க மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் தீவிர ராணுவ நடவடிக்கைகளால் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கிய ராணுவத்தின் உதவியுடன் கூட்டுப்படைகள் தொடர்ந்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.

இதில் ரஷ்ய, ஜேர்மானிய, பிரான்ஸ் நாட்டு ஜிகாதி பெண்கள் கைதாகினர். பலருக்கு ஈராக்கிய நீதிமன்றம் தண்டனை அறிவித்து சிறையில் தள்ளியுள்ளது.

இந்த நிலையில் ஈராக்கில் இருந்து ஜேர்மானிய ஜிகாதி பெண்கள் இருவர் தங்கள் பிள்ளைகளுடன் வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.

ஈராக்கில் உள்ள குர்துகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் சிறையில் இருந்துள்ளதாக நாடு திரும்பிய இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்கள் தொடர்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள ஜேர்மன் விசாரணை அதிகாரிகள், அவர்களை கைது செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் தடுத்துள்ளதாகவும் முறையிட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ள இவர்கள் கண்டிப்பாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே என வாதிடும் விசாரணை அதிகாரிகள்,

அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் கண்டிப்பாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் எனவும், அவர்களும் வெடிகுண்டுக்கு இணையானவர்கள் என்று அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் வீழ்ச்சியை ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வரவேற்றாலும்,

குறித்த நாடுகளில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பின்னர் நாடு திரும்பும் நபர்களால் அச்சுறுத்தல் எழ வாய்ப்பு உள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !