நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் – அங்கஜன்
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர்ந்து வாழும் ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அங்கஜன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பிரதமருடன் பேசியுள்ளோம். அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கு கொள்கை ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கான கால அவகாசம் சற்றுக் கூடுதலாக வேண்டும் என்பதனால் அது நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என நம்புகின்றேன்.
இதேவேளை, இந்தியாவில் உள்ளவர்கள் யுத்தம் காரணமாக இங்கிருந்து சென்றவர்களாவர். அவர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அவர்கள் மட்டுமல்லாது வேறு நாடுகளில் உள்ளவர்களும் திரும்பி வரவேண்டும் என்பதே எமது விருப்பம். அவ்வாறு நாடு திரும்புபவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.