Main Menu

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோருவோம் – சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையை ஏற்படுமாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலையினை கருத்தில் கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

இதற்காக தேர்தல்கள் அலுவலகத்திற்கு நன்றி கூறுகின்றோம். நாட்டின் நிலமை சுமூகமடைந்ததன் பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில் தேவை ஏற்படின் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சட்டத்தில் இடமுண்டு. குறிப்பாக ஜனாதிபதி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரிமையின்படி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான தேவை ஏற்படின், நாடாளுமன்றத்தை கூட்டலாம்.

இன்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கான தேவையான ஆலோசனைகளை மற்றும் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தை கூட்டி அதன் ஊடாக மேற்கொள்ளலாம். இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை.

இருப்பினும் இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கேட்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிலைமையை அவதானிப்போம். கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. அவ்வாறான ஒரு கூட்டம் கூட்டப்பட்டால் கூட்டமைப்பும் அதில் கலந்து கொண்டு, அனைவருடைய கருத்துக்களையும் அறிந்து, அவசரகால நிலமை நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டிய தேவையை கொடுக்குமாக இருந்தால், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை கூட்டமைப்பு முன்வைக்கும்.

இருப்பினும் தற்போது அந்த கோரிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுக்கவில்லை“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares