நாடளாவிய ரீதியில் பொங்கல் கொண்டாட்டம்

உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டியை நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னாரில் இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, மன்னார் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

அதேபோன்று வவுனியா மாவட்டத்திலும், மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மிகவும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், முறிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் பொங்கல் நிகழ்வும் இன்று சிறப்பாக இடம்பெற்றது. தைத்திருநாளான இன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பொங்கலும் பகிரப்பட்டது.

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் வீடுகள், வர்த்த நிலையங்கள் என பல பகுதிகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்தோடு, கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த வழிபாட்டிலும், பொங்கல் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், யாழிலும் சகல ஆலயங்களிலும் காலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதேபோன்று கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில், தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் முன்பாக பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மாமாங்கேஸ்வர பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

தைத்திருநாள் வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை மலையகத்தில் குறிப்பாக ஹட்டன், கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

பொங்கல் பண்டிகையானது தென்னிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் பல பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக புத்தளம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் விஷேட பொங்கல் நிகழ்வு நடைபெற்றதோடு, இதில் சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் ஆதவன் இணையதளம் மற்றும் தொலைக்காட்சியின் அன்பான வாழ்த்துக்கள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !