நல்லாட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: பிக்கு அமைப்பு சாடல்

ஆறு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் அடிப்படியில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம், இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு மகாநாயக்கத் தேரர்களால் மனுவொன்று கையளிக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழங்குத் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் அனுபவிக்கும் வகையில், 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ளது.

இந்தநிலையில், இராஜகிரியவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அந்த அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் வாழும் சிங்கள- பௌத்த மக்களுக்கு பாரிய அநீதியை இழக்கும் ஒரு செயற்பாடே தற்போது நடந்துள்ளது. அதாவது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் அனுபவிக்கும் வகையில், 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ளது.

நீதிமன்றத்தை அவர் அவமதித்ததாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் நானும் உடன் இருந்தேன். அதாவது, பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு தொடர்பில் இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் அவ்வப்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இதனால், குறித்த தினத்தன்று இந்த வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தமையால், நானும் ஞானசார தேரரும் சென்றிருந்தோம்.

அப்போது, பிரகீத் எக்னெலிகொட கடந்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கொலை செய்யப்பட்டிருப்பின் எலும்புகளோ அல்லது கொலைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்களோ இல்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதனால், நாம் கைது செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்றே நினைத்தோம்.

ஆனால், அப்போது அது நடக்கவில்லை. மறுமுனையில், கைது செய்யப்பட்டவர்கள் கையில் விலங்குடனும் கண்ணீருடனும் காணப்பட்டனர். இதனைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன்தான் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டிருந்தார். இதனை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதியும், சட்டத்துக்கு இணங்கவே தாம் இந்த விடயத்தை அணுகுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம், பிக்கு ஒருவர் என்ற காரணத்தினால் தான் நீதிமன்றில் இவ்வாறு கருத்து வெளியிட அனுமதி வழங்கியதாகவும் நீதிபதி கூறியிருந்தார். இவ்வாறு இருக்கும்போது, அரச சட்டத்தரணிகள் ஞானசாரத் தேரருக்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதனால், மோசமான அரசாங்கத்தின் கீழ் செயற்படும் அதிகாரிகள் என ஞானசார தேரர் கூறினார்.

எவ்வாறாயினும், அவர் சட்டத்தரணிகளையோ நீதிபதியையோ அல்லது நீதிமன்றையோ அவமரியாதை செய்யவே இல்லை. இதுதான் அங்கு நடைபெற்றது. இதற்காகவே, இவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றுக்கு கல் அடித்த அமைச்சர் ரிஸாத் பதியூதீன் போன்றோர் எல்லாம் சுதந்திரமாகத் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்தில் ஏன் இவ்வாறு பாகுபாடு காட்ட வேண்டும்? ஞானசார தேரருக்கு போன்று இந்த அமைச்சர் விடயத்தில் ஏன் சட்டம் செயற்படுவதில்லை? நாட்டில் தற்போது தூக்குத் தண்டனை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் இது வேண்டும் என்றும் இன்னொரு தரப்பினர் வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டத்தில் ஏதோ ஒரு வகையில், பலவீனத்தன்மை காணப்படுகின்ற காரணத்தினால் தானே சிலர் இதனை வேண்டாம் என்கிறார்கள்? மேலும், இதனால்தானே ஒரு நீதிமன்றில் தீர்ப்பைக்கூட மேன்முறையீட்டு நீதிமன்றில் மறுப்பரீசீலனை செய்கிறோம்? ஏன், சிலருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு இருக்கும்போது, ஞானசார தேரருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதுவே எமது கோரிக்கையாகும். அவர் பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர் அல்ல. எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி துரித நடிவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நாம் வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளிக்கவும் எதிர்ப்பார்த்துள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !