நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனைவிக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபிமானம் குறித்து அறிந்து பொறாமை கொண்ட கணவன், தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறி த்த தகவல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன.
இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த தினேஸ்வர் பட்ஹிதத் (33 வயது) என்ற கணவரே தனது மனைவியான டோன்னி டொஜோயை (27வயது) குயீன்ஸ் பிராந்தியத்திலுள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்த பின் னர் ஹொவார்ட் கடற்கரைக்கு சென்று அங்குள்ள மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தினேஸ்வருக்கும் டோன்னிக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணமானது. இந்நிலையில் தினேஸ்வர் இதற்கு முன்னரும் பல தடவைகள் மனைவியை தாக்கியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தினேஸ்வர் டோன்னியை கடுமையாக தாக்கியதையடுத்து டோன்னி பொலிஸாரிடம் அது தொடர்பில் முறைப்பாடு செய்து தனக்கு தினேஸ்வரிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரியிருந்தார்.
அவர் தனது மனைவியை அறைந்து அவரது கழுத்தை நெரிக்க முயன்றதாக அச்சமயம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தினேஸ்வர் மேற்படி படுகொலை இடம்பெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் (கடந்த புதன்கிழமை) தினேஸ்வர் ஒழுங்கீன நடத்தையில் ஈடுபட்டதாக தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருந்தார். அவருக்கான தண்டனை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் வழங்கப்படவிருந்தது.
இதனையடுத்து டோன்னிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
டோன்னி தானும் தினேஸ்வரும் ஒன்றாக வாழ்ந்த வீட்டை விட்டு கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் வெளியேறியிருந்தார்.
எனினும் தன்னுடன் இணைந்து வாழ தினேஸ்வருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க விரும்பிய டோன்னி, கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அந்த வீட்டிற்கு சென்ற போதே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக டோன்னியின் சகோதரி பன்னிட்டா பரகத் தெரிவித்தார்.

தினேஸ்வர் எதற்காக தனது மனைவியை படுகொலை செய் தார் என்பதற்கான காரணம் எதனையும் குறிப்பிட்டு துண்டுக் குறிப்பு எதனையும் எழுதிவைக்கவில்லை என்ற போதும் அவர் தனது மனைவிக்கு நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீதிருந்த அதீத அபிமானம் காரணமாக பொறாமை கொண்டிருந்ததாகவும் அதுவே அவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவிருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மேற்படி படு கொலை மற்றும் தற்கொலை குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.