த.தே.ம.மு.யில் இருந்து மணிவண்ணன் முற்றாக நீக்கம்- தேசிய அமைப்பாளரானார் சுரேஷ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளராக, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப செயலாளராக ஞானேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வி.மணிவண்ணனுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நாங்கள் முன்வைத்த 6 அம்சக் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான காரணவிளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.
மேலும், மத்திய குழுவிற்குக் கட்டுப்படாத நிலையில் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்த வகையில், நேற்று கட்சியின் மத்திய குழு கூடி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு வாரகால இடைநிறுத்தத்தை ஆராய்ந்து, அவரின் காரண விளக்கங்கள் சரியானதாக அமையாத காரணத்தினால் வி.மணிவண்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் வி.மணிவண்ணனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கட்சியின் பெயர் மற்றும் பதவியை அவர் பயன்படுத்த முடியாது. கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்துகொண்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், கட்சியின் தேசிய அமைப்பாளராக, மட்டக்களப்பு மாவட்டத்தின் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப செயலாளராக ஞானேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட குகன் நியமிக்கப்பட்டுள்ளார்” என கஜேந்திரகுமார் அறிவித்துள்ளார்.