தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை!

ஆசியக் கிரிக்கெட் சம்மேளனம் (ACC) வளர்ந்து வரும் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் ஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஓமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை 109 ஓட்டங்களால் அபாரமாக வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

எட்டு அணிகள் பங்குபெறுகின்ற இம்முறைக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது.

இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு முன்வரிசை வீரர்களாக வந்த அவிஷ்க பெர்ணாந்து மற்றும் ஹசித போயகொட ஆகியோர் அரைச்சதங்களின் மூலம் வலுச்சேர்த்தனர்.

இதில் ஹசித போயகொட 94 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றிருக்க, அவிஷ்க பெர்னாந்து 9 பெளண்டரிகளுடன் 56 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இவர்களின் அதிரடியோடு இலங்கை தரப்பு 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியான முறையில் செயற்பட்ட கமிந்து மெண்டிஸ் 62 பந்துகளில் 75 ஓட்டங்களை விளாச, சம்மு அஷான் வெறும் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை குவித்தனர்.

மறுமுனையில் ஓமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜெய் ஓடட்ரா 3 விக்கெட்டுக்களையும், பிலால் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 325 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களுக்கு 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜடின்தர் சிங் 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், ஷெஹான் மதுசங்க மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !