தொடரும் பதற்றம்: தூத்துக்குடியில் இராணுவம் குவிப்பு!

தூத்துக்குடியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு துணை இராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசிடம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி துணை இராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியரையும் பொலிஸ் உயர் அதிகாரியையும் இடம்மாற்றும் வரை கலவரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்து நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த போராட்டம் கலவரமாக மாறியதில், பொலிஸார் மீது கல்வீச்சு மற்றும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது பல பொலிஸார் படுகாயமடைந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பல பொதுமக்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது பொலிஸார் தடுக்க முற்பட்டபோது அது கலவரமாக மாறியுள்ளது.

இதன்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததுடன், பலர் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !