தேவிபுரம் கிராமத்தில் முதியோர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
மன்னாரில் மட்டுமல்ல முல்லைத்தீவிலும் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் உள்ளன. சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்புடன் குறித்த புதைகுழிகளை அகன்று அவை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் ‘அ’ பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை, அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவு செய்யப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்னமும் மின்சார வதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் அவர்கள் குறித்த எந்த வித ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பெருமளவானோர் எந்த வித விசாரணைகளும் இன்றி வருடக்கணக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 80 க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் பகுதியில் ஒன்பது பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் காணப்படும் சூழலே காணப்படுகின்றது. எனவே சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்பின் கீழ் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டு அவை தொர்பில் சர்வதேச விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் நில ஆக்கிரமிப்பும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இது குறித்து எமது மக்கள் தொடர்ந்தும் முறையிட்டுவருகின்றனர்.
எனவே எமது மக்கள் மீது தொடரும் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்வதன் மூலமும் மூன்றாந்தரப்பின் துணையுடன் கூட்டமைப்பு – அரசாங்கம் இடையிலான பேச்சுக்களை முன்னெடுப்பதன் மூலமுமே எமது மக்களுக்கான நிரந்தர சமாதானத்தையும் நிரந்தரத் தீர்வினையும் எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் பிரான்ஸ் வாழ் புலம்பெயர் மக்களின் நிதி உதவியில் குறித்த முதியோர் இல்லம் அமைக்கப்படவுள்ளது. நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது தேவிபுரம் ‘அ’, ‘ஆ’ பகுதிகளின் முதியோர்களில் 140 பேருக்கு பாதணிகளும் மதிய உணவும் வழங்கப்பட்டன.
திருமதி அருந்ததி ஒழுங்குபடுத்தலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி சிவமோகன், ரவிகரன், கனகசுந்தரசுவாமி மற்றும் திருமதி மேரி குணசீலன் ஆகியோரும் தேவிபுரம் முதியோர் சங்கத் தலைவர் அ.முருகையா, செயலாளர் இராசதுரை, பொருளாளர் திருமதி செல்வரட்ணம் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த முதியவர்,
போருக்கு முன்பாக பலருக்கு தெரிந்திருக்காத எமது கிராமம் இறுதிப் போர் இடம்பெற்ற மிக நெருக்கடியான சூழலில் பல்லாயிரக்கணக்கான எமது மக்களுக்கு இருப்பிடம் வழங்கியிருந்தது. போருக்குப் பின்னர் மீண்டும் எமது கிராமம் தொடர்பில் அரச தரப்பினால் முழுமையான கவனிப்பின்றியே வாழ்ந்துவருகின்றோம். இந்த நிலையில் முதியோர்களாகிய எமக்காக இவ்வாறான ஒரு இல்லம் அமைப்பதற்கு முன்வந்து உதவி புரிந்து வரும் ரீ.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினருக்கும் புலம் பெயர் மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
பகிரவும்...