தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடையும் – வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லையில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது. வாஜ்பாய் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர். ஆனால் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார்.

மேலும் மக்களிடையே இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு நல்ல திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. அழிக்கக்கூடிய திட்டங்களை தான் கொண்டு வருகிறார். இதற்கு தமிழக அரசு உதவியாக உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். அதன்மூலம் அண்ணா, கருணாநிதி கண்ட மாநில சுயாட்சியும், சமூக நீதி பாதுகாப்பும் கிடைக்கும். மோடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

இதனால் நடுத்தர மக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் வெறுப்பில் உள்ளனர். எனவே பா.ஜனதா கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் 140 இடங்கள் கூட கிடைக்காது. படுதோல்வி அடையும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு எதிரான திட்டங்களையே நடைமுறைப்படுத்தி விட்டு, தற்போது மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற தந்திரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் அவரை பற்றி நன்றாக புரிந்து வைத்து உள்ளனர். அவருடைய ஆட்சி 2019ம் ஆண்டு இறுதி வரை நடக்குமா என்பதே சந்தேகம்தான்“ என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !