Main Menu

தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ! – பொ.ஐங்கரநேசன்

இலங்கைத் தீவின் இயற்கை மலர்களிடையே கார்த்திகைப் பூவுக்கெனத் தனித்துவமான சில வசீகரங்கள் உண்டு. காத்திருந்தது போல ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இது அரும்பத் தொடங்கும். இதன் வெளிர்பச்சை நிறப் பூ முகை மூப்பெய்துகையில் மஞ்சளாகி, முனையில் இருந்து இரத்தச் சிவப்பேறி, பாதிமஞ்சள் பாதிசிவப்பு என்று பிரகாசித்துப் பின்னர் முற்றிலும் ‘குருதிப்’ பூவாக நிறம் மாறும். கார்த்திகையில் மொட்டவிழும் பொலிவும், நெருப்பெனச் சுவாலிக்கும் மஞ்சள் – சிவப்பு நிறப் பூவிதழ்களும்,குறிப்பிட்டுச் சொல்லும் படியான வாசம் எதுவும் இல்லாத இந்தப் பூவுக்கு ஈழத் தமிழர்களிடையே வாசத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆம்! 2003ஆம் ஆண்டு மாவீரர் காலப்பகுதியையொட்டித் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் தாயகத்தினுடைய தேசிய மலராகக் கார்த்திகைப் பூவைத் தெரிவு செய்துதமிழன்னையின் முடியில் சூட்டியதன் பின்னர் அதற்குத் தேசிய வாசம் கிடைத்திருக்கிறது.

எல்லா நாடுகளுமே தேசிய அரசியலில் தேசியக்கொடி, தேசிய கீதத்துக்கு அடுத்தபடியாக, மக்களை எழுச்சி கொள்ள வைத்து ஒருங்கிணைக்கும் வசியக் குறியீடுகளாகச் சில உயிர்க்கூறுகளைப் பயன்படுத்துகின்றன. தங்களுடைய அரசியல், பண்பாடு, இயற்கைச் சூழல்களின் வெட்டு முகங்களைப் பிரதிபலிக்கும்படியான மலர், மரம், மிருகம், பறவை போன்றவற்றைத் தெரிவு செய்து தங்கள் தேசிய முகவரிகளாக்கிக் கொள்கின்றன.

ஐக்கிய அமெரிக்கா தனது தேசிய மலராக 1986ஆம் ஆண்டு ரோஜாப்பூவை அங்கீகரித்தது. அமெரிக்கர்களின் பண்பாட்டில் மற்றைய எல்லாப் பூக்களையும்விட அன்பின் குறியீடாக ரோஜா அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் தேசியப் பறவையாக, வட அமெரிக்காவின் ஒரேயொரு கழுகு இனமான மொட்டந்தலைக்கழுகு 1782ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. உணவுச் சங்கிலியின் உச்சப்படியில் இருப்பதால் மற்றைய எல்லாவற்றையும் இரையாக்கக்கூடிய வல்லாண்மையைப் பெற்றிருக்கும் மொட்டந்தலைக் கழுகை அமெரிக்கர்கள் சுதந்திரத்தின் குறியீடு ஆகக் கருதுகிறார்கள். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும்கூடத் தங்களுக்கெனத் தனியான மரங்களைத் தேர்ந்து வைத்துள்ளன.

இந்தியா தேசிய மலராக இந்துத்துவ அரசியலின் வெளிப்படையாகத் தாமரைப் பூவை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் தேசிய அரசியற்கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னமாக தாமரைப்பூ இருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மரமாக பண்டைய நீதி – நிர்வாக முறையான பஞ்சாயத்து இன்றளவும் கூடுகின்ற இடமாக நிலவும் ஆலமரம் விளங்குகிறது. தேசிய விலங்காகத் தனது கானகங்களில் மட்டுமே ஒதுங்கி விட்ட வரிப்புலியையும், தேசியப் பறவையாகத் தன்னையே தாயகமாகக் கொண்ட அழகொழுகும் மயிலையும்அடையாளப்படுத்தியுள்ளது. இவற்றுடன், நூற்றுக்கு மேற்பட்ட மாங்கனி வகைகளைக் கொண்டிருக்கும் பெருமையில் தேசியப் பழமாக மாம்பழத்தையும் சுவைக்கிறது.

‘கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள்
கட்டுற சேலைகள் இருக்கும்
கார்த்திகை மாதம் கல்லறை நாளில்
தாயவள் மேனி சிலிர்க்கும்’

கவிஞர் புதுவை இரத்தினதுரை

ஸ்ரீலங்கா தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கும் இயற்கைச் சூழலுக்கும் அமைவாக தேசிய மரலாக நீலோற்பலத்தையும் (Nymphaeanouchali),  தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் (Mesuanagasarium),

தேசியப்பறவையாக காட்டுக்கோழியையும் அறிவித்துள்ளது. இலங்கைக் காடுகளில் கரந்துறையாத சிங்கத்தை தேசியக்கொடியில் வாளேந்த வைத்த பின்னர் ஸ்ரீலங்கா அரசால் வேறு எதனையும் தேசிய விலங்காகக் கொள்ள முடியவில்லை. இதனால் பெரஹரா போன்ற பௌத்த விழாக்களில் முக்கியத்துவம் பெறும் யானையைக் கலாச்சார விலங்காகக் கொண்டாடுகிறது. யானைகளின் கூட்டத்தில் அரிதாக வெள்ளை யானைகள் பிறப்பதுண்டு. வெள்ளை யானை பௌத்த மதத்தில் கௌதம புத்தரின் முற்பிறப்பாகப் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிங்களத் தேசியம் தமிழர்களது அடையாளங்களை அங்கீகரிக்காது அழித்தொழிக்கத் தலைப்பட்ட பின்னர், அவற்றைத் தூக்கி நிறுத்தும் எதிர்ப்பு அரசியலாகத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முளைவிட்டது. தேசியப் போராட்டம் தன் பரிணாமப் பாதையில் காலத்துக்குக் காலம் சமூக – வரலாற்றுக் கூறுகளால் தமிழ்த் தேசியத்தின் இருப்பை நிறுவி வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ்த் தேசியப் பலத்துக்கு மேலும் பல்பரிமாண வலிமை சேர்க்கும் வகையில் தேசிய மலராக கார்த்திகைப்பூவை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது.

கார்த்திகைப் பூச்செடி பழந்தமிழ் இலக்கியங்களில் காந்தள் என்றும் ஆங்கிலத்தில் ‘Glory Lily’ அல்லது ‘Tiger Claw’ என்றும் சுட்டப் பெறுகிறது. அறிவியல் மொழியில் ‘குளோரியேசா சுப்பேர்பா’ (Gloriosasuperba)  என அழைக்கப்படுகிறது. கார்த்திகைப்பூவை கண்ணுற்ற ஆய்வாளர்கள் இருவரில் ஒருவர் கண்கவர் வனப்பு (Glorious)  என்றும் மற்றையவர் அழகின் உச்சம் (Superb) என்றும் வியக்க அதுவே ‘Gloriosasuperba’

என்று பெயரானதாகச் சொல்லப்படுகிறது. கார்த்திகைப் பூ பற்றிய இவ்வர்ணனை மிகையானது அல்ல, இதன் அழகு கண்கொட்டாமல் பார்க்கத்தூண்டும். கண்வலிக்கும் அளவுக்கு என்பார்களே, அந்த அளவுக்கு மீளவும் மீளவும் பார்க்க வைக்கும். இதனால் தமிழகக் கிராமங்களில் கண்வலிப்பூ என்றும் உச்சரிக்கப்படுகிறது. கண்நோக்கும் பூவே கண்நோகும்பூவாக மருவிப் பின்னர், கண்வலிப்பூவாகத் திரிந்ததாகச் சொல்பவர்களும் உண்டு.

கார்த்திகைப் பூச்செடி தன்இலை நுனிகளை நூற்சுருளாக்கிக் கொழுகொம்புகளைப் பற்றி வளரும் ஒரு தந்தேறி (Tendril climber) வகையாகும். பொதுவாக ஐப்பசியில் முளைவிட்டு, கார்த்திகையில் பூத்துக்குலுங்கி மார்கழியில் மறையும் இந்தச் செடி மீதிக்காலங்களில் மண்ணுள் நிலங்கீழ் தண்டாகத் (Rhizome)

துயிலுகிறது. வெண்ணிறச் சதைப்பிடிப்பான இக்கிழங்கு தன் ஒரு நுனியை ‘ஏர்முனை’யாக வளைத்து மண்ணினுள் நங்கூரமிட்டுக் கொள்ளும். இதனால் ‘கலப்பைக் கிழங்கு’  எனவும் பெயர் பெற்றுள்ளது.

கார்த்திகைச் செடியின் ரிஷpமூலமாகத் தென் ஆபிரிக்கா நம்பப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளுடன் இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளின் இயற்கைச் சூழலில் உள்நாட்டுக்குரிய (Endemic)  இனங்களில் ஒன்றாக நிலைபெற்றுள்ளது. தாவரவியலாளர்களால் இதுவரையில் ஆறு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பிரதானமான இரண்டு இனங்களில் ஒன்றான ‘Gloriosa superba’ ஆபிரிக்க – ஆசிய நாடுகளிலும், பூவிதழ்களில் வெண்மை கலந்த ‘Gloriosa rothschildiana’ ஆபிரிக்காவிலும் அதிகமாகப் பரவியுள்ளன. வெப்பவலயச் செடியான இதன்மீது இடைவெப்பவலய மேற்கு நாடுகளுக்கும் மோகம் அதிகம். வெப்பக் குடில்கள் (Hot House)

அமைத்து அதனுள் அலங்காரச் செடிகளாக வளர்த்து வருகின்றன. அமெரிக்கா அதனுடைய இயற்கைத் தாவரமாக இல்லாத போதும் தனது அஞ்சல் தலை ஒன்றில் கார்த்திகைப் பூவைப் பொறித்து அழகு பார்த்துள்ளது.

கார்த்திகைப் பூ, பண்டைத் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. ‘காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்’ என்று காந்தள் மலர்மாலை அணியும் வழக்கத்தைப் பதிற்றுப்பத்து அத்தாட்சிப்படுத்துகிறது. ‘மரகதமணித் தாள்செறிந்த மணிக் காந்தண் மென்விரல்கள்’ என்று காந்தளைப் பெண்களின் விரல்களுக்குச் சிலப்பதிகாரம் உவமை செய்கிறது. ‘காந்தண் முழுமுதல் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்’ என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீர் கொண்டுவந்து சேர்த்த காந்தட்கிழங்கை நட்டுவளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றிக் குறுந்தொகை கூறுகிறது. ‘சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுட் காந்தளுள்ளும்’ எனத் தெய்வங்களுக்கு காந்தள்பூ சூட்டப்படுவதை அகநானூறு தெளிவுபடுத்துகிறது,’வெறியறி சிறப்பின் வௌ;வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்’ என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்திரிக்கிறது. தமிழரின் போர்க்கடவுள் முருகனுக்குரிய பூவாகக் காந்தளைப் புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகிறது. இப்படி, கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்னும் அளவுக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் பூராவும் கார்த்திகைப் பூ இறைந்து கிடக்கிறது.

தமிழ்ப்பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசியப் பூவின் தேர்வில் கார்த்திகைப் பூவின் அடிப்படைத்தகுதிகள் ஆகும். இவற்றுடன் தமிழர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் தேசியக்கொடியின் சிவப்பு – மஞ்சள் வர்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் கார்த்திகையில் பூ விரியும் அதன் அழகும் சிறப்புத் தகைமைகளாகச் சேர்ந்து கொள்ள கார்த்திகைப் பூ ஈழத்தமிழர்களின் தேசிய மலராக மலர்ந்துள்ளது.

கார்த்திகைப் பூவைத் தேசிய மலராகத் தேர்வு செய்தமை குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. கார்த்திகைப் பூச்செடியில் இயற்கையாகவே ‘கொல்கிசின்’ (Colchicine)

என்னும் நச்சு இரசாயனம் காணப்படுகிறது. கொல்கிசின் நஞ்சினை ‘சயனைட்’ குப்பிகள் அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடு உடைய இயல்பாகக் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக் கிழங்கு தற்கொலைக் காரணியாக அமைவதைத் ‘தற்கொலைப் போராளி’ களான கரும்புலிகளுடன் ஒப்பிட்டும் இந்த விமர்சனங்கள் அமைகின்றன.

கார்த்திகைப் பூ இனங்களில் ஒன்றைத்தான் (Gloriosa rothschildiana) ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான சிம்பாப்வே தனது தேசியப் பூவாக தேர்வு செய்துள்ளது. பல்வேறு காலனித்துவ நாடுகளின் பிடியின் கீழும், பின்னர் சிறுபான்மை வெள்ளை இனத்தின் அடக்குமுறையின் கீழும் அடிமைப்பட்டிருந்த சிம்பாப்வே 1980ஆம் ஆண்டிலேயே பிரித்தானியாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெற்றது. தேசியப் பூக்களின் தேர்வில் நஞ்சு ஒரு பின்னடைவு அல்ல என்பதற்கு இன்னும் பல உலக நாடகளின் தேசியப் பூக்கள் சாட்சிகளாக உள்ளன. மலர்களின் ஏற்றுமதியில் முன்னணியில் திகழும் ஒல்லாந்து (Holland)  நச்சுப்பூண்டான ரியூலிப்பின் (Tulip) மலரையே அரவணைத்துக் கொண்டிருக்கிறது. ரியூலிப்பின் ஒரு குமுழிலுள்ள (குமிழ் – வெங்காயம், உள்ளி போன்ற நிலங்கீழ்ச் சேமிப்பு) நஞ்சின் அளவே மனிதனை மரணத்துக்கு அழைத்துச் செல்லப் போதுமானது. பிரான்சின் பிரபல்யமான அதன் தேசிய மலர் ஐரிஸ் (Fleur de lis)  ஏறத்தாழ அதன் எல்லாப்பாகங்களிலுமே நஞ்சினைத் தடவி வைத்துள்ளது. வேல்ஸ்சின் டஃபோடில் (Daffodil)  பூவும், அதன் குமிழும் அபாயகரமான அளவுக்கு நஞ்சினைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி மாநிலங்கள் தங்கள் மாநில மலராகத் தெரிவு செய்து வைத்திருக்கும் மக்னோலியா (Magnolia) பூக்களும் விசத்தன்மையானவை.

மேற்கூறிய உதாரணங்கள் மட்டுமல்ல, பூக்கும் தாவரங்கள் எல்லாமே தமது ஏதேனும் ஒரு பகுதியில், ஏதேனும் ஓர் அளவில், ஏதேனும் ஒரு வகையான நச்சினைச் சேமிப்பில் கொண்டுள்ளன.

தாவரங்களின் இராச்சியத்தில் ஏனைய தாவரங்களை ஓரங்கட்டி, பூக்கும் தாவரங்கள் (Angiosperms) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பதற்கு இந்த நச்சு வேதிகளே உதவுகின்றன. பச்சைய வெறியோடு அலையும் பூச்சிகளில் இருந்தும், மேய்ச்சல் விலங்குகளில் இருந்தும் பூக்கும் தாவரங்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் ஆயதங்களாக இவை விளங்குகின்றன. சிங்கோனா மரவுரியில் ‘குயினைன்’, கோப்பியில் ‘கஃபின்;’, கொக்கோவில் ‘கொக்கொயின்’, ஒப்பியம் செடியில் ‘மோர்பின்’, புகையிலையில் ‘நிக்கொற்றின்’, பட்டிப்பூவில் ‘வின்கிறிஸ்ரின்’, செவ்வலரியில் (Nerium)

‘ஒலியாண்ட்றின்’, ஆமணக்கில் ‘றிசின்’ வேதிப்போர் நஞ்சுகளில் சில உதாரணங்களாகும். செவ்வலரி இலையொன்றில் ஒரு குழந்தையை மரணிக்க வைக்கும் அளவுக்கு ஒலியாண்ட்றின் செறிந்துள்ளது. இரண்டு ஆமணக்கம் விதைகளிலுள்ள ‘றிசின’ ஒரு மனிதனைக் கொல்லப் போதுமானது.
நமக்கு மிக நெருக்கமான உணவுத்தாரங்களிலேகூட நஞ்சுகள் கரந்துறைகின்றன. பீச் பழத்தின் விதையில் ‘சயனைட்’ சேமிப்பு உள்ளது. பச்சைத் தக்காளியில் ‘ரொமாற்றின்’ நஞ்சு பரவியிருக்கிறது. உருளைக் கிழங்குச் செடியின் துளிர்களிலும், அதன் பச்சைக்கிழங்குத் தோல்களிலும், கத்தரியின் இலைகளிலும் ‘சொலானின்’ விஷம் ஒளிந்துள்ளது. இப்படி இதுவரையில் கண்டறியப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான தாவர நஞ்சுகளில் ஒன்றாகவே கார்த்திகைப் பூச்செடியில் ‘கொல்கிசின்’ உருவாகிறது.

கார்த்திகைப் பூச்செடியின் மற்றைய பாகங்களைவிடக் கிழங்கில் ‘கொல்கிசின்’ கொஞ்சம் அதிகமாகத் திரளுவதால் கிழங்கை உட்கொள்ள நேரின் மரணம் சம்பவிக்கிறது. கார்த்திகைச்செடி பயிர்ச் செய்கை நிலங்களிலும் வளருவதால் வற்றாளைக் கிழங்கு என நினைத்துத் தவறுதலாக கார்த்திகைக்கிழங்கைச் சாப்பிட்டுப் பலியான சம்பவங்கள் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன. மரணத்தை விளைவிக்கும் கொல்கிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அருமருந்தாகவும் உள்ளது. கார்த்திகைக் கிழங்குப்பசை ஊமைக்காயங்கள், தசைச்சுளுக்கு, வயிற்றுநோ, மூலம், முடக்குவாதம், தொழுநோய் போன்ற உபாதைகளுக்கும், கருச்சிதைவு பிரசவ வலியைத் தூண்டவும், பேன் கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்குத் தேள்கடி, பாம்புக்கடியைக் குணப்படுத்தக்கூடிய விசமுறிவு ஆற்றல் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் வீடுகளினுள் பாம்புகள் நுழைவதைத்தடுக்கும் நோக்குடன் சாளரங்களில் கார்த்திகைக் கிழங்கைப்போட்டு வைக்கும் நடைமுறை உள்ளது. ஆயுர்வேத,யுனானி முறைகளைத் தொடர்ந்து ஆங்கில மருத்துவமும் கொல்கிசினைச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. மருத்துவப் பெறுமதி காரணமாகத் தமிழகத்தில் கார்த்திகைப் பூச்செடிகளைப் பெரும் பண்ணைகளில் பணப்பயிராகப் பயிரிட்டு வளர்க்கிறார்கள். இதன் விதைகளையும், கிழங்குகளையும், இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளையும் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய்கள் அந்நிய செலாவணியாகத் தமிழகத்துக்குக் கிடைக்கிறது.

இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத் தமிழினத்தின் குறியீடாக, வேறு எந்தப்பூவை விடவும் பொருத்தமான தேர்வாகக் கார்த்திகைப்பூ சிறப்புப் பெற்றுள்ளது. ஆனால் கார்த்திகை பூ சொல்லும் செய்தியை, அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்குப் பேரினவாதம் தயாராக இல்லை. இலங்கைத் தீவின் ஒரே ஒரு பூ நீலோற்பலம்தான் என்று அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது.
இயற்கை, அதன் பரிணாமப் பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கி எறிந்து தன் பல்லினத்துவத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை வரலாறு பூராவும் நிரூபித்தே வந்துள்ளது.

நன்றி – ஏழாவது ஊழி

பகிரவும்...