தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது: மனோ கணேசன்

நாட்டில் நிலவும் தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெறுமனே வடக்கு கிழக்கு குறித்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தென்னிலங்கையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இன்று இதனைப் பொய்யாக்கும் வகையில் நாட்டினது நலனிற்காக கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது. தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் பெருமைப்படவேண்டும்.

இங்கு கூட்டமைப்பு எதுவித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. முதிர்ச்சியான தலைமைத்துவத்தினைக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பு எந்த ஒரு நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எமது அரசாங்கம் மேலும் பல திட்டங்களை முன்வைக்க வேண்டும் என நான் ரணில் விக்ரமசிங்கவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !