தேசிய கீதம் பாடுவது நல்லிணக்கத்தை குழப்பாது – துரைராஜசிங்கம்
தேசிய கீதம் பாடுவது என்பது நாட்டினை இணைக்கும் நடவடிக்கையே தவிர அது நல்லிணக்கத்தினை எந்தவகையிலும் குழப்பும் செயற்பாடு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவர் பிரசன்னா இந்திரகுமார், புளோட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கேசவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், “பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் எதிர்வரும் சுதந்திரதின நிகழ்வில் தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டும்தான் பாடப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
பிழையான தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. பல நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் அந்த நாட்டின் தேசியகீதம் பாடப்படுவதை நாம் காணலாம். பெல்ஜியம், கனடா போன்ற நாடுகளில் மூன்று மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது. நியூசிலாந்து, சூரினா ஆகிய நாடுகளில் இரு மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் ஐந்து மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது. சுவிட்சர்லாந்திலே நான்கு மொழிகளில் தேசியகீதம் பாடப்படுகின்றது.
சிங்கப்பூரிலே 75சதவீதம் சீனர்கள் வாழ்கின்றனர். ஆனால் சிங்கப்பூரிலே தேசிய கீதம் மலாய் மொழியில் பாடப்படுகின்றது. அதேபோன்று இந்தியாவிலும் ஒரு மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகின்றது. ஆனால் அங்குள்ள சிறுபான்மை மக்களின் மொழியான வங்க மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகின்றது.
ஆகவே இந்த விடயங்களை அடிப்படையாகக்கொண்டு நாம் பார்க்கின்றபோது பிழையான தகவல்களின் அடிப்படையில் ஜனக பண்டார தென்னக்கோன் இந்த முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என நாங்கள் கருதுகின்றோம். இந்த விடயம் அரங்கிற்கு வருவதற்கு முன்பு சுதந்திர தினத்திலே தேசியகீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்படுவதற்கு முன்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தை கவனத்திற்கொண்டு தமிழிலும் தேசிய கீதம் பாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இந்த நாட்டில் தொடர்ச்சியாக நல்லிணக்கத்தை வாழவைப்பதற்கான விடயமாக இருக்கும்” என மேலும் தெரிவித்தார்.