“ தேசத்தின் குரல் “ (பாலா அண்ணா நினைவுக்கவி)

மீன்பாடும் தேன்நாட்டில் பிறந்து
இலண்டன் மாநகரில் வாழ்ந்து
எம் தேசத்தின் குரலாய் மிளிர்ந்து
தமிழினத்தின் குரலாய் ஒலித்து
நிரந்தரமாய் ஓய்வு எடுத்ததே
எம் தேசத்தின் குரல்
மார்கழித் திங்கள் பதின்நான்கிலே !

எம் உரிமைக்கான தேவையை
உலகப் பரப்பில் நிலைநாட்டி
பேச்சு வார்த்தை மேடைகளில் எல்லாம்
முழங்கித் தள்ளிய தேசத்தின்குரல்
தேம்ஸ்நதிக் காற்றோடு கலந்ததுவே
மார்கழித் திங்கள் பதின்நான்கிலே !

தேசத்தின் குரலே
தேச விடியலுக்காய்
எம் இனத்தின் குரலானீர்
உரிமைகளை உணர்வோடு
உலகப்பரப்பில் உரைத்து நின்றீர்
உலக அரசியலைப் போதித்தீர்
உலக வரலாறுகளைப் புகட்டினீர்
உம் வாழ்வையே எமக்கான பாடமாக்கினீர்
இன்று எம்மோடு இல்லையே நீர் !

பத்திரிகையாளனாய் தத்துவ ஆசிரியனாய்
சித்தாந்த வாதியாய் சிந்தனை வாதியாய்
அரசியல் ஆலோசகனாய் வரலாற்று ஆசானாய்
தலைமைப் பேச்சாளனாய் படைப்பாளியாய்
பன்முகத் திறமையோடு வலம் வந்தீரே !

போர்க்களத்தில் உலாவந்த தத்துவப்போராளி நீ
தேசவிடியலுக்காய் கூவிய விடுதலைக்குயில் நீ
தேசத்தலைவனின் வலதுகரமும் நீ
மகாநாடுகளை அதிர வைத்த பேச்சாளன் நீ
அரசியல் வரலாற்றைப் போதித்த ஆசான் நீ
அரசியலைக் கரைத்துக் குடித்த சாணக்கியன் நீ
அரசியலை நகர்த்திய இராஜதந்திரியும் நீயே நீயே !

கொடிய நோய் தாக்கிய போதும்
இறுதி மூச்சு அடங்கும் வரை
எங்கள் தேசத்தின் குரலாய் ஒலித்து
மக்கள் நலனுக்காகவே உழைத்து
போரும் சமாதானமும் என்ற நூலையும் தந்து
உம் வாழ்வையே வரலாற்றுப் பாடமாக்கி
தேம்ஸ்நதிக் காறோடு கலந்து விட்டீரே
மார்கழித் திங்கள் பதின்நான்கிலே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 13.12.2018


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !