தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை – ஹரிபரந்தாமன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது.மேலும் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை மேறகொண்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, காவல்துறையினர் சுட்டதில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கையும், புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இது குறித்து எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை. எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.