துருக்கி நாட்டில் துப்பாக்கியால் சுட்டு எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி

துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி நடந்தது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி சி.எச்.பி. கட்சி ஆகும். அந்த கட்சியின் துணைத்தலைவராகவும், எம்.பி.யாகவும் இருப்பவர் புலன்ட் டெஸ்கான்.

இவர் நேற்று முன்தினம் நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஆய்டான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதில் புலன்ட் டெஸ்கானின் காலில் குண்டு பாய்ந்தது. அவர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது. அவரை எதற்காக கொல்ல முயன்றனர் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை.

அந்த நாட்டில் கடந்த ஜூலை மாதம் ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்ததும், மக்கள் ஆதரவுடன் இந்த முயற்சியை அதிபர் தாயிப் எர்டோகன் முறியடித்ததும் நினைவுகூரத்தக்கது.

இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முயற்சித்த சதிகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளதாகவும், பாராளுமன்றம் அதை அங்கீகரித்த பின்னர் தானும் அங்கீகரிக்கப்போவதாகவும் அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !