துருக்கி- கிரேக்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!
துருக்கி மற்றும் கிரேக்கத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில், மீட்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில் 24பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிரேக்க தீவான சமோஸில் ஆண் மற்றும் பெண் என இரண்டு இளைஞர்கள் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
துருக்கியில் பெரும்பாலான சேதங்கள் ஈஜியன் ரிசார்ட் நகரமான இஸ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்தன. இது மூன்று மில்லியன் குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளால் நிரம்பியுள்ள இப்பகுதியில், இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.