துருக்கியில் படகு கவிழ்ந்து 9 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு!

துருக்கியின் கடலெல்லைக்குள் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி கடற்பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் மேற்கிலுள்ள சுற்றுலாப்பயணிகளைக் கவரும் பகுதியான குசடசிற்கு அருகிலுள்ள ஐடின் மாகாண கடற்பரப்பில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், ஒன்பது பேர் உயிரிழந்ததோடு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து வறுமை காரணமாக மத்திய அரேபிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடம் கோரும் நோக்குடன் துருக்கி கடலின் ஊடாகப் சட்டவிரோதமாக படகில் பயணிப்பது வழக்கமாகயிருந்தது.

இதன் போது பாதுகாப்பற்ற சட்டவிரோதப் பயணமென்பதியால் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கடலில் மூழ்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, குறித்த உயிரிழப்புக்களை குறைக்கும் முகமாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டது.

அவ்வொப்பந்தத்திற்கு இணங்க, துருக்கிக் கரையோரப் பாதுகாப்பு கடற்படைப் பிரிவினர்கள் அந்நாட்டுக் கடற்பரப்புக்குள் நுழையும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை மீட்கும் மற்றும் காணாமற் போன புகலிடக்கோரிக்கையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் குறித்த பணியை ஒப்பந்தப்படி இதுவரை சரிவர செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் கடற்பரப்பில் இவ்வருடம் இது வரை 54 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு கரையோர அதிகாரிகள் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !