தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் எதுவுமே செய்யவில்லை: அமெரிக்கா மீண்டும் அதிருப்தி

பாகிஸ்தானில் தலைதூக்கி வரும் ஹக்கானி மற்றும் தலிபான் தீவிரவாதிகளை உரிய வகையில் ஒடுக்க அந்நாட்டு அரசு எதுவுமே செய்யவில்லை என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக அளித்த வாக்குறுதியை காப்பாற்ற பாகிஸ்தான் தவறி விட்டது. பாகிஸ்தானில் தலைதூக்கி வரும் ஹக்கானி மற்றும் தலிபான் தீவிரவாதிகளை உரிய வகையில் ஒடுக்குவதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

ஓரிரவுக்குள் எல்லாவற்றையும் மாற்ற முடியாது சிறிது காலம் ஆகலாம் என்பதை நாங்கள் ஏற்றுகொள்ளும் அதேவேளையில் அவர்களது மண்ணில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், அந்த திசையை நோக்கி எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படாததால் பாகிஸ்தானை மிகவும் நெருக்கமாக கண்காணித்தபடி இன்னும் நாங்கள் காத்திருக்கிறோம்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீதை விடுதலை செய்த பாகிஸ்தான் அரசின் முடிவானது தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற திசையை பொருத்தவரை ஒரு பின்னடைவு என்று அமெரிக்கா கருதுகிறது என அந்த உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !