Main Menu

தீர்வை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராக உள்ளனர் : ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுப்பார் என்­பதே எமது எதிர்­பார்ப்பு – சுமந்திரன்

இந்த நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் பன்­மு­கத்­தன்­மை­யி­னை­யும் சமத்­து­வத்­தி­னையும் அங்­கீ­க­ரிக்கும் ஒன்­றி­ணைந்த பிரி­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத நாட்டுக்குள் தீர்­வொன்­றினை எட்­டு­வ­தற்கு எமது மக்கள் தயா­ரா­கவே உள்­ளனர். ஆனால் ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை­யா­னது  பிரச்­சனை உரு­வா­வ­தற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்­ட­மாக உரு­வெ­டுத்து மூன்று தசாப்­தங்­க­ளாக பல தீமை­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கார­ண­மாக இருந்த   தலை­வர்­களின் பின்­ன­டை­வான சிந்­த­னைக்கு ஒத்த சிந்­த­னை­யாக அமைந்­துள்­ளது என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ.சுமந்­திரன் சபையில் எடுத்­து­ரைத்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டனம் மீதான இரு நாட்கள் விவா­தத்தின் முதல்நாள் அமர்வில் கலந்­து­கொண்டு கருத்து உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

 அவர் மேலும்  உரை­யாற்­று­கையில் 

கடந்த ஜன­வரி மூன்றாம் திகதி   ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜபக் ஷவினால்  முன்­வைக்­கப்­பட்ட அர­சாங்­கத்தின் கொள்கைப்  பிர­க­ட­ன­மா­னது கடந்த மூன்று தசாப்­தங்­க­ளாக ஆட்­சி­செய்த அர­சாங்­கங்­களின் பொது­வான திசை­யி­லி­ருந்து விலகிச் செல்­லு­கின்ற அறி­கு­றி­களை கொண்­டி­ருப்­ப­தினால் இது மிக அவ­தா­ன­மாக விவா­திக்­கப்­பட வேண்­டிய ஒன்­றாகும்.  

ஜனா­தி­பதி  கடந்த நவம்பர் 16ஆம் திகதி  மிக முக்­கி­ய­மான வெற்­றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பாரிய வெற்­றியில் காணப்­படும் பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில்  பெரும்­பான்­மை­யான சிங்­கள பௌத்த மக்­களை தவிர ஏனைய மக்கள் ஜனா­தி­பதி மீது  நம்­பிக்கை வைப்­ப­தற்கு தயா­ராக இல்லை என்­ப­தாகும். இதை எவ்­வி­தத்­திலும் ஜனா­தி­பதி மீது அவ­தூறு கொண்­டு­வரும் நோக்கில் நான் கூற­வில்லை.  மாறாக தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் ஒன்­றி­ணைந்த நாடாக நாம் இருக்­க­வேண்­டு­மென்­பதில் கரி­ச­னை­யாக இருந்தால் இத்­த­கைய ஒரு முக்­கி­ய­மான அம்­சத்­தினை நாம் புறக்­க­ணிக்க முடி­யாது என்­ப­தனை சுட்­டிக்­காட்­டவே இந்தக் கருத்­தினை முன்­வைக்­கின்றேன். 

ஒரு நாட்டின் செல்­வாக்­கு­மிக்க தலை­வரை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்­விலே அவ­ரது சொந்த மக்கள் அவரில் நம்­பிக்கை வைக்­கி­றார்­களா என்­பது முக்­கி­ய­மா­ன­தல்ல. மாறாக ஏனைய மக்கள் அவரில் நம்­பிக்கை வைக்க தயா­ராக உள்­ளார்­களா என்­பதே முக்­கி­ய­மாகும். துர­திஷ்­ட­வ­ச­மாக இது இன்னும் நடை­பெ­றாத ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

ஜனா­தி­ப­தியின் வெளிப்­ப­டுத்தல்

ஜனா­தி­பதி   தனது வெற்­றிக்கு பின் வெளி­யிட்ட இரண்டு கருத்­துக்­களில் இந்த விடயம் தொடர்பில் தாம் தெளி­வான விளக்­கத்­து­ட­னேயே உள்ளார் என்­பதை  வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். ருவன்­வெ­லி­சா­யவில் இடம்­பெற்ற பத­வி­யேற்பு நிகழ்வில்  ஜனா­தி­பதி  இதனை கூறி­யி­ருந்த அதே­வேளை மிகத்­தெ­ளி­வாக தான் முழு நாட்­டிற்கும் ஜனா­தி­பதி என்றும்  தனக்கு வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்கும் தானே ஜனா­தி­பதி என்­ப­த­னையும் சேர்த்தே கூறி­யி­ருந்தார். 

எமது நாடா­னது பல்­வேறு கலாச்­சா­ரங்கள், மொழிகள், சம­யங்கள், இனங்கள் என்­ப­வற்றை பிர­தி­ப­லிக்கும் பன்­மு­கத்­தன்மை கொண்ட  மக்­களைக் கொண்ட  ஒரு நாடு என்­பதை ஏற்­றுக்­கொண்டு  ஜனா­தி­பதி  இந்த இடை­வெ­ளியை குறைக்க நட­வ­டிக்கை எடுப்பார் என்­பது எமது எதிர்­பார்ப்­பாகும். இந்த ஒவ்­வொரு மக்­களின் சமத்­துவம் என்­பது அவர்­களின் எண்­ணிக்­கையின் பலத்­திலே தங்­கி­யி­ருக்­க­வில்லை. 

ஜன­நா­ய­க­மா­னது தப்­பிப்­பி­ழைக்­கவும்  செழிப்­ப­டை­யவும் வேண்­டு­மே­யன்றி வெளிப்­ப­டை­யான பேரி­ன­வா­தத்தை நோக்கி செல்­லாமல் இருக்க வேண்­டு­மென்றால்  இந்த கொள்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். ஆனால் கவ­லைக்­கி­ட­மாக ஜன­வரி மூன்றாம் திகதி   பாரா­ளு­மன்­றத்தில்  ஆற்­றிய உரையில் அத்­த­கைய பின்­ன­டை­வான ஒரு நிலைப்­பாட்­டினை ஜனா­தி­பதி  தெரி­வித்­தி­ருந்தார்.

பின்­ன­டை­வான சிந்­தனை

 பிரச்­சினை உரு­வா­வ­தற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்­ட­மாக உரு­வெ­டுத்து மூன்று தசாப்­தங்­க­ளாக பல தீமை­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கார­ண­மாக இருந்த எமது நாட்டின் தலை­வர்­களின் பின்­ன­டை­வான சிந்­த­னைக்கு ஒத்த சிந்­த­னை­யாக அது அமைந்­தி­ருந்­தது. 

எமது கட்­சி­யான இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி அல்­லது  சமஷ்டி கட்சி என அறி­யப்­பட்ட கட்சி குடி­யு­ரிமை சட்­டத்தின் விளை­வாக பிறந்த ஒரு கட்­சி­யாகும். இந்­திய, பாகிஸ்­தா­னிய குடி­யு­ரிமைச் சட்­ட­மா­னது  முத­லா­வது பாரா­ளு­மன்­றத்தில் 7  அங்­கத்­த­வர்­களை கொண்­டி­ருந்த கிட்­டத்­தட்ட 8 இலட்சம் மக்­களின் வாக்­கு­ரி­மையை ரத்து செய்­தது. 

ஏன் இன அடிப்­ப­டையில் கட்சி உரு­வா­னது

 பெரும்­பான்­மை­யி­னரின் விருப்பம் என்ற பெய­ரி­லேயே ஒரு குடி­ம­கனின் அடிப்­படை உரி­மையை இது பறித்­தது.  மேலும் அவர்­க­ளு­டைய குடி­யு­ரி­மை­யையும் அது இல்­லாமல் செய்­தது. சுதந்­திர இலங்­கையின் முத­லா­வது பாரா­ளு­மன்­றத்தின் பேரி­ன­வாத செயற்­பாடு கார­ண­மா­கவே இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி எனும் இன அடிப்­ப­டை­யி­லான ஒரு கட்சி உரு­வா­வ­தற்­கான தேவை உண்­டா­கி­யது என்­ப­தனை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

1956 ஆம் ஆண்டு அரச மொழிகள் சட்­ட­மா­னது சிங்­கள மொழி­யினை மாத்­திரம் அர­ச­க­ரும மொழி­யாக ஏற்றுக் கொண்­டதை அடுத்து இந்த பேரி­ன­வாதம் மேலும் புலப்­படும் வகையில் உருப்­பெற்­றதை நாம் கண்டோம். நமது தலை­வர்கள் அமை­தி­யான முறை­யிலே காலி­மு­கத்­தி­டலில் சத்­தி­யாக்­கி­ர­கத்தில் ஈடு­பட்ட பொழுது தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அது பின்னர் தொடர்ச்­சி­யான படு­கொ­லை­க­ளாக மாறி­யது.  முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு வரை­யப்­பட்ட பொழுது மொழிகள் தொடர்பில் இருந்த அநீ­தியை திருத்­து­வ­தற்கு எமது கட்சி முயற்சி செய்­தது.  அத்­துடன்  சமஷ்டி  கட்சி பின்­வரும் திருத்­தங்­களை முன்­மொ­ழிந்­தி­ருந்­தது 

சிங்­க­ளமும் தமிழும் , சட்­டங்கள் இயற்­றப்­படும் மொழி­க­ளாக இருத்தல் வேண்டும் , அரச கரும மொழி­க­ளாக இருத்தல் வேண்டும்,  நீதி­மன்­றங்­களின் மொழி­க­ளாக இருத்தல் வேண்டும், அனைத்து சட்­டங்­களும் வெளி­யி­டப்­படும் மொழி­க­ளாக இருத்தல் வேண்டும் என்ற கார­ணிகள் இருந்­தன.  இந்த மும்­மொ­ழி­வுகள் அனைத்தும் 88 வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்­டன. இவற்­றிக்கு ஆத­ர­வாக 13 வாக்­குகள் கிடைத்­தன. இந்த திருத்­தங்­களின் விவா­தங்­களின் பின்னர் சமஷ்டி  கட்­சியின் தலை­வ­ரான எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம்   சபையில் உரை­யாற்­றி­யி­ருந்தார். அந்த உரையில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள புதிய அர­சியல் யாப்­பிலே தமிழ் பேசும் மக்­களின் மொழி உரிமை திருப்­பி­தி­க­ர­மாக அமை­ய­வில்லை என்­ப­தி­னாலே இந்த சபையின் நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்தும் ஈடு­ப­டு­வது நன்­மை­ய­ளிக்­காத விட­ய­மாகும் என்றும் அன்­றைய தினம் சபையின் நட­வ­டிக்­கைகள் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­கின்ற வேளைக்கு பின்னர் தாம் சபைக்கு சமூ­க­ம­ளிக்க போவ­தில்லை என்றும் தெரி­வித்தார். 

பேரி­ன­வாத அர­சியல் அமைப்பு

எமது கட்­சியின் முயற்­சிகள் வீண்­போன அதே­நேரம் பேரி­ன­வாத அர­சி­ய­ல­மைப்பு சட்டம் 1972ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. இது 1978ஆம் ஆண்டு இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போதும் நடை­பெற்­றது. இதன் பிற்­பாடே  ஆயுதம் ஏந்­தாத தமிழ் மக்கள் பெரு­வா­ரி­யாக கொலை­செய்­யப்­பட்ட 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. 

இதன்­போது இந்­தியா தனது அலு­வ­ல­கங்­க­ளூ­டாக இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­ட­தற்­க­மைய இந்­திய படை­களை இங்கு அனுப்பி தமி­ழர்­க­ளிற்கு வர­லாற்று ரீதி­யாக நடந்த அநீ­தி­களை சரி செய்­ய­முன்­வந்­தது. 1987ஆம் ஆண்டு நாட்­டி­லுள்ள மக்­களின் பன்­மு­கத்­தன்­மை­யினை ஏற்­றுக்­கொண்டு அர­சி­ய­ல­மைப்­பினை சீர்­தி­ருத்­து­கின்ற  சரி­யான திசையில் நாடு பய­ணிக்க ஆரம்­பித்­தது. எண்­ணிக்­கையில் குறை­வாக உள்ள மக்­களும் தமது பிராந்­தி­யங்­களில் நிர்­வா­கத்­தினை மேற்­கொள்­ளக்­கூ­டிய அதி­கா­ரங்­களை கொண்ட மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. சிங்­கள மொழி­யோடு கூட தமிழும் அரச கரும மொழி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. 

இந்த ஆரம்ப நட­வ­டிக்­கைகள் நாங்கள் விலக்­கி­வைக்­கப்­பட்­டி­ருந்த தேசிய நீரோட்­டத்தில் மீண்டும் இணைய வழி­வ­குத்­தன. தொடர்ந்து வந்த அர­சாங்­கங்கள் தமிழ் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டன: 

ஜனா­தி­பதி பிரே­ம­தா­சாவின் காலத்தில் மங்­கள முன­சிங்க தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு, ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் காலத்தில் கொண்டு வரப்­பட்ட ஆகஸ்ட் 2000 அர­சியல் யாப்பு பத்­திரம்  மற்றும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் காலத்தில் சர்வ கட்சி அங்­கத்­தவர் குழுவின் நட­வ­டிக்­கைகள் போன்­றன இவற்றுள் உள்­ள­டங்கும்.  

மஹிந்­தவின் உறுதி

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதிப் போரின்­போது யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந்­தியா உட்­பட சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தமிழ் மக்­களின் தேசிய பிரச்­சினை அர­சியல் ரீதி­யாக அதி­கா­ர­ப­ர­வ­லாக்­கத்தின் ஊடாக தீர்க்­கப்­படும்  என்ற உறு­தியை ஜனா­தி­பதி ராஜ­பக்­சவின் அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­தது. இந்த உறு­தி­மொழி குறைந்­தது மூன்று தடவை இந்­தி­யா­விற்கு வழங்­கப்­பட்­டது. அதிலே 13ஆவது திருத்தும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்டு அர்த்­த­முள்ள அதி­கா­ரப்­ப­கிர்­வினை அடையும் நோக்கில் 13ஆவது  திருத்­தச்­சட்டம் மேலும் கட்­டி­யெ­ழுப்­பப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் முழு­மை­யான அமு­லாக்கம் என்­பது தேசிய மொழி­யான தமிழ் மொழியின் முழு­மை­யான அமு­லாக்­கத்­தி­னையும் உள்­ள­டக்­கு­கின்­றது.

புதிய அர­சியல் அமைப்­புக்­கான முயற்சி

2015ஆம் ஆண்டு சிறி­சேன – விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரா­ளு­மன்­றத்­தினை அர­சியல் சாசன   சபை­யாக மாற்றும் பிரே­ரணை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.  ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு உள்­ள­டங்­க­லான அனைத்து கட்­சி­களின் பங்­கு­பற்­று­த­லோடு வழி­காட்டல் குழு மற்றும் ஏனைய உப குழுக்கள் இது தொடர்பில் அநேக காரி­யங்­களை முன்­னெ­டுத்து வந்­தன. 

இந்த நாட்டின் நன்­மையை குறிக்­கோ­ளாக கொண்டு இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வினை காணும் நோக்கில் இந்த நட­வ­டிக்­கை­களில் நாம் பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்­கி­யி­ருந்தோம். எமது மக்கள் அனைத்து மக்­க­ளி­னதும் பன்­மு­கத்­தன்­மை­யி­னை­யையும் சமத்­து­வத்­தி­னையும் அங்­கீ­க­ரிக்கும் ஒன்­றி­ணைந்த பிரி­ப­டாத பிரிக்­க­மு­டி­யாத நாட்­டிற்குள் தீர்­வொன்­றினை எட்ட இன்­னமும் தயா­ராக இருக்­கி­றார்கள். அத­ன­டிப்­ப­டையில் புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கின்ற ஜனா­தி­ப­தியின் கருத்­தோடு நாம் உடன்­ப­டு­கின்றோம். 

அழி­வுக்கு இட்­டுச்­செல்லும்

சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பிற்­பாடு எமது சமூ­கத்தின் பன்­மு­கத்­தை­மை­யினை அர்த்­த­முள்­ள­வ­கையில் அங்­கீ­க­ரிக்க முடி­யாமல் இருந்த பின்­ன­ணி­யினை கடந்த 30 வரு­டங்­களில் நாம் எடுத்து வரும் பல்­வேறு சாத­க­மான நட­வ­டிக்­கை­களால் மாற்ற முயன்று வரு­கின்றோம். நாம் இன்னும் பய­ணிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. இந்த நாடு செழிப்­ப­டைய  வேண்டும் என்றால் நாம் அதே நோக்கில் பய­ணிக்க வேண்டும். மாறாக அந்த பாதையில் இருந்து விலகும் எத்­த­கைய நட­வ­டிக்­கையும் எம் அனை­வ­ரையும் பாரிய அழி­விற்கே இட்டுச் செல்லும். 

 இந்த அர­சாங்­கத்­திற்கு சார்­பாக செயற்­படும் அநேகர் சிங்­கப்­பூ­ரா­னது எவ்­வாறு தம் மக்கள் மத்­தியில் தேசிய நல்­லி­ணக்­கத்­தி­னையும் செழிப்­பி­னையும் அடைந்­துள்­ளது என கூறு­வ­தனை அவ­தா­னித்­துள்ளேன். நாம் விரும்­பு­வதை மாத்­திரம் பொறுக்­கிக்­கொள்­ளாமல் இருப்­போ­மானால் சிங்­கப்பூர் ஒரு நல்ல உதா­ரணம். சிங்­கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத்தொகையில் 15 வீதம்  மாத்திரம் கொண்ட மலே மக்களின் மொழியில் இசைக்கப்படுகிறது. நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ வின் அறிவுரைக்கு செவிமடுப்பது சாலத்தகுந்தது என கருதுகிறேன். 

“பிரித்தானியாவின் மாதிரி பொதுநலவாய நாடு இலங்கை  ஆகும். சுதந்திரத்தினை நோக்கி மிக அவதானமாக தயார்படுத்தப்பட்ட ஒரு நாடாகும். சுதந்திரத்தின் பின்னர் 10 மில்லியனிற்கும் சற்று குறைவான மக்களை கொண்டிருந்த ஒரு நடுத்தரளவிலான நாடாகும்.  1948இல் இலங்கை  சுதந்திரம் பெற்ற போது சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக துல்லியமான ஒரு மாதிரியாக அது விளங்கியது. 

ஆனால் அது அவ்வாறு செயற்படவில்லை ஒரு வளமிக்க நாடு வீணாகபோய்க்கொண்டிருப்பதனை எனது விஜயங்களின் போது நான் கண்டேன். 

ஒருமனிதனின்  ஒரு வாக்கினால் ஒரு அடிப்படை பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.  8 மில்லியன் சிங்கள மக்கள் 2 மில்லியன் தமிழ் மக்களை தேசிய மொழியான ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாறும்படிக்கு வாக்குகளினாலே தோற்க்கடித்தார்கள். இது தமிழ் மக்களிற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு அரச மதமும் இல்லாமல் இருந்த ஒரு நாட்டிலே சிங்களவர்கள் பௌத்த மதத்தினை தேசிய மதமாக மாற்றினார்கள். இதனால் தமிழர்களும் இந்துக்களும் நிராகரிக்கப்பட்டதனை உணர்ந்தார்கள்”.  என்றார்.  

பகிரவும்...