தி.மு.க.வின் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் போட்டியின்றித் தெரிவாகினர்
தி.மு.க.வின் பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் குறித்த இரு பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவர்.
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவுக்குப் பின்னர், அந்தப் பதவிக்கான வெற்றிடம் நிலவியதுடன் பொருளாளர் பதவிக்கான தெரிவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
.தன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தசூழலில் இன்று மாலை 4 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த நிலையில் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
இதன்படி, தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தெரிவாகினர்.