தி.மு.க. இந்துக்களுக்கு எதிரானது என்பதை உதயநிதி நிரூபித்துள்ளார்: வானதி சீனிவாசன்
சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இந்த நாட்டில் சனாதன தர்மம் என்பது யாரை குறிக்கிறது. அது இந்து மதத்தை தானே குறிக்கிறது. சனாதன தர்மம் என்பது வாழ்வியல் நெறி. தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? மற்ற மதங்களில் தீண்டாமை இல்லையா? மூட நம்பிக்கை இல்லையா? சமத்துவம்தான் நிலவுகிறதா? ஒரு குறிப்பிட்ட மதத்தில் பெண்கள் போதகராக வர முடியாது என்பது தெரியுமா? இன்னொரு மதத்தில் பெண்கள் ஆண்களை போல் வழிபாடு கூட நடத்த முடியாது என்பது தெரியுமா? மூட நம்பிக்கை, தீண்டாமை ஒழிப்பு என்று மாநாடு நடத்துவதாக இருந்தால் அந்த மதங்களின் பெயரையும் வைத்து நடத்த வேண்டியது தானே. அந்த மதங்களிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பேசலாமே. இந்து மதத்தில் சாதிய பாகுபாடு இருப்பதாக மிகைப்படுத்துகிறீர்களே மற்ற மதங்களில் சாதிக்கு ஒரு வழிபாட்டு தலம், மொழிக்கு ஒரு வழிபாட்டு தலம் இருக்கிறதே. அரசியல் ரீதியாக சாதிய குழுக்களாக மக்களை தி.மு.க. பல காலமாக பிரித்தாளுகிறது. இந்து மதத்தை பழித்தும் சிறுபான்மையினரை புகழ்ந்தும் பேசுவதால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஒரு சில தொகுதிகளில் சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். அமைச்சர் உதயநிதி தன் மனைவி கிறிஸ்தவர் என்றும் கிறிஸ்தவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அந்த மதம் சார்ந்த விழாக்களில் கலந்துகொண்டு உங்களால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று பகிரங்கமாகவே பேசினார். சனாதன இந்து மதத்தை அழிக்கவும், இந்து மதத்துக்கு எதிராகவும் தி.மு.க. தொடர்ந்து செயல்படுவதாக நாங்கள் கூறி வருவதை உதயநிதி நிரூபித்து இருக்கிறார். சனாதன தர்மம் என்ற வாழ்வியல் நெறியை சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாக கட்டமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது. சனாதனத்தை ஒழிக்கப் போவதாக இன்று புறப்பட்டு இருக்கும் உதயநிதி ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் தகப்பனார், தாத்தா காலத்தில் கூட உங்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு செல்வதை தடுக்க முடியவில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கூட புறக்கணிக்க முடிய வில்லை. இந்து மதத்தினரை மற்ற மதத்துக்கு மாற்ற உதயநிதி கையாளும் யுக்தியாகவே பார்க்கிறேன். சாதி, மதம், இனம் பார்க்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து அமைச்சர் ஆனவர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவும், நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. இந்து மதத்தை அழிக்க நீங்கள் யார்? உங்களுக்கு அந்த உரிமையை தந்தது யார்? இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மத ரீதியாக மக்களை பிரித்து வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கும் தி.மு.க.வின் முகமூடியை மக்கள் கிழித்து எறிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.