திலீபனின் நினைவுத் தூபி விவகாரத்தில் சிவஞானம் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான உரிமை யாழ். மாநகர சபைக்கே உள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சிவஞானம் இதனை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தியாக திலிபனின் நினைவு நாள் குறித்து 2 நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாண மாநகர முதல்வருக்கு கடிதமொன்றினை எழுதி அனுப்பியுள்ளேன்
குறித்த கடிதத்தில் முக்கியமான விடயத்தை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றேன்.
அதாவது 1988ஆம் ஆண்டே இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டது. இதற்கு எங்களது சொந்த நிதியே பயன்படுத்தப்பட்டது. மாநகர நிதி பயன்படுத்தப்படவில்லை
ஆனால், மாநகர ஆணையாளராக இருந்தக் காலத்தில் முழுமையான சட்ட அங்கீகாரம் மற்றும் அதிகாரம் ஆகியவை என்னிடம் இருந்தபோதே இந்த தூபி நிருவப்பட்டது.
இந்த தூபி, மாநகர சபைக்குரிய நிர்வாக கட்டமைப்புக்கு இருத்தல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆகவே அதனை பராமரிக்கின்ற பொறுப்பு, உரிமை மாநகர சபைக்கு செல்கின்றது.
ஆகையால் மாநகர சபையே அதனை பராமரிக்கவும் நிர்வகிக்கவும் வேண்டும்.
அந்தவகையில் அதனுடைய உரிமையை தனிநபரோ, அரசியல் கட்சிகளோ உரிமை கோர முடியாதென அக்கடிதத்தில் எழுதியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.