திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இரத்து : தேர்தல் ஆணையம்

திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தேர்தல் ஆணையகம் அதனை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் மீதான விசாரணைகளும் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளன.

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.கவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி காலமானத்தைத் தொடர்ந்து அந்தத் தொகுதி வெற்றிடமானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு எதிர்வரும் 28ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுவதுடன் 31ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எனினும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் வழமைக்கு திரும்பாத நிலையில், இடைத்தேர்தலை இரத்துச் செய்யக்கோரி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டன.

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ததுடன் பணிகளை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !