திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கினை இன்று (வியாழக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மற்றொரு வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை  விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு எதிரவரும் 28 ஆம் திகதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்துவருகிறது. புயலின் பாதிப்பிலிருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.

இதன் காரணமாக, திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும்.

தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !