திருமணமான 6 நாளில் மனைவியை காதலனுடன் சேர்த்துவைத்த இளைஞர்!

திருமணம் முடிந்து ஆறு நாள்களில், புதுமாப்பிள்ளை தன் மனைவியை காதலனுடன் சேர்த்துவைத்துள்ள விசித்திர சம்பவம், ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து ஒடிசா உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான செய்தியின் விவரம் பின்வருமாறு: `ஒடிசா மாநிலம், சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள பாமரா கிராமத்தைச் சேர்ந்தவர், பாசுதேவ் டாப்போ.  இவருக்கும் ஜார்சுடுடா மாவட்டத்தைச் சேர்ந்த தேப்தி என்கிற பெண்ணுக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடந்தது. தேப்திக்கு பெற்றோர் கிடையாது என்பதால், பாசுதேவ் தன் மனைவிமீது அதீத அன்பு செலுத்தினார். இந்நிலையில், திருமணம் நடந்து 6 நாள்களில் தேப்தியின் உறவினர்கள் என்று கூறிகொண்டு, பிரதான் உட்பட 3 பேர் பாசுதேவ் வீட்டுக்கு வந்தனர். அதில் இருவர், பாசுதேவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றனர். அந்தச் சமயத்தில், பிரதானுடன் தேப்தி நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பாசுதேவின் உறவினர்கள் பார்த்துவிட்டனர். இதையடுத்து, பிரதானுக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது அங்கு வந்த பாசுதேவ், உறவினர்களின் பிடியிலிருந்து பிரதானை மீட்டு, என்ன நடந்தது என்பதை பொறுமையாக விசாரித்தார்.

அப்போது, திருமணத்துக்கு முன்பு பிரதானும் தேப்தியும் காதலித்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும், தேப்திக்கு பெற்றோர்கள் இல்லாததால் உறவினர்கள் கட்டாயப்படுத்தி பாசுதேவுடன் திருமணம் செய்துவைத்துவிட்டனர். அதிர்ச்சியில் உறைந்த பாசுதேவ், தன்னைத் தேற்றிக்கொண்டு, இருவருக்கும் திருமணம் நடத்திவைக்க முடிவெடுத்தார். இரு வீட்டாரிடமும் பேசி, சமாதானப்படுத்தி முறைப்படி அவரது மனைவி தேப்திக்கும் காதலர் பிரதானுக்கும் திருமணம் செய்துவைத்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !