திருச்சியில் இராணுவ வீரர்களின் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி

ஜம்மு- காஷ்மீரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர்களின் உடல்கள், திருச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்,  பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழக அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் இதன்போது அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து இருவரின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு என்ற இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அங்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் உயிரிழந்த  சுப்பிரமணியத்தின் உடல், இராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான சவலாப்பேரியில் இன்று (சனிக்கிழமை)  அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுப்பரமணியத்தின் இறுதிக் கிரியையில் பங்கேற்பதற்காக சவலாப்பேரிக்கு செல்லவுள்ளார்.

ஜம்மு காஷ்மீர், புல்வமா பகுதியில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 44 பேர்  நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த படைவீரர்கள் பலரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !