திராவிட கட்சிகள் வெளியேறினால் தான் தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும் – எச்.ராஜா

காவிரி பிரச்சினை இவ்வளவு தூரம் விசுவரூபம் எடுத்ததற்கு தி.மு.க.தான் காரணம். செய்த தவறை மறைப்பதற்காக தான் மு. க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். மோடியை திரும்பி போக சொன்னவர்கள் கவர்னரை சந்தித்து, பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டது ஏன்?
வைகோவின் நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தேனியில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தவர், பிரதமர் வந்த போது திடீரென சென்னைக்கு வந்தது ஏன்? ஏதும் திட்டத்தோடு வைகோ சென்னைக்கு வந்தாரா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும். இனி ஒரு காலத்திலும் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.
நதிகள் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 4 மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளின் பட்டியலை மத்திய அரசிடம் அளித்தால், மத்திய அரசு தங்களுடைய பிரதிநிதிகளை சேர்த்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் வன்முறையை தூண்டி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.