இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது.
எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம்.
மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம்.
பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான் தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.
கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல், “நவீனன்” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன்.
அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ஜில்லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.
மனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது.
மீண்டும் ‘நவீனன்’ என்று அழைத்தேன்.
நவீனன் எழும்பி விட்டான்.
ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது. ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.
பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது.
50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.
உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
‘வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி. சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்மதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ’
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.
அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்?
எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்?
மனித நேயத்தையும், அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?
எது?
ஆம்.
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், அகிம்சை என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், ‘கட்டுப்பாடு’ என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.
என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.
திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும், பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.
‘புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை’
இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.
உயிருடன் அந்த மனிதத் தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?
265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டு விட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
ஆம். தமிழர் தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்?
எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!
காலை 11 மணிக்கு “என்பார்ம்” செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.
பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும், கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, ‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?
அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர்.
பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் ‘ஓ’ என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.
பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.
ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு, காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
தலைவர் பிரபாகரன், சொர்ணம், குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.
சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை. அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார். அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம் தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்.!
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
‘1981ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே தனது சகோதரன் சித்தார்த்தன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே தலைவர் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தலைவரோடு முழுமையாக இணைந்துகொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை சகல நடவடிக்கைகளிலும் பங்கெடுத்தவர் இவர். இவரின் சகோதரன் சித்தார்த்தன் 1986 இல் நாவற்குழி இராணுவ முகாமைத் தாக்கி அழிக்கின்ற முயற்சியில் பென்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவருடைய அடுத்த சகோதரன், இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்துகொண்டிருந்தபோது, இந்தியாவினதும் இலங்கையினதும் துரோகத்தனத்தால் குமரப்பா புலேந்திரன் அவர்களோடு கப்டன் கரனாக சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.
அவரின் இரு சகோதரர்கள் 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழீழ துரோகக் கும்பல்களினால் அழிக்கப்பட்டார். இப்படியாக இன்று இந்தக் குடும்பம் இந்த விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக இழந்து நிற்கின்றது.
‘இந்திய இராணுவம் இங்கே வந்தபோதுகூட மணலாறு காட்டுப்பகுதியில் தலைவர் செயற்பட்ட காலங்களிலெல்லாம் அவரோடு நண்பனுமாய் சகோதரனுமாய் மட்டுமல்லாது அவரின் உறுதுணையாகவும் நின்றவர். காட்டில் இருந்த காலங்களில்கூட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பல ஆண் பெண் போராளிகளுக்கு போர் நுட்பங்களையும், போர்க்கருவிகளையும் பயிற்றுவித்த சிறந்த ஆசான்.
‘இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்ட காலப்பகுதியில் தலைவரின் எண்ணத்திற்கு புதுவடிவம் கொடுத்து கடற்புறா என்ற பெயரில் கடற்புலி அமைப்பொன்றை உருவாக்கியவர். முதன்முதலில் பாரிய கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதலுக்காக கொலின்ஸ், காந்தரூபன், வினோத் ஆகிய கடற்கரும்புலிகளை வழிநடத்தி வெற்றிகரமாக அத்தாக்குதலை மேற்கொண்டவர்.
ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று இப்படியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடக்கின்ற யுத்தங்களின் போது தலைவருடன் கூட நின்று இராணுவ அசைவுகள் போராளிகளின் செயற்பாடுகள் யாவற்றையும் கவனித்து தெளிவுபடுத்தி வெற்றிப்பாதையில் கொண்டுநடத்திய இந்த வீரத்தளபதி இப்போது எங்களோடு இல்லை. தமிழீழத்தினுடைய பல பிரதேசங்களை எமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் எதிரியின் ஊடுருவல் நடவடிக்கையால் இவர் அழிக்கப்பட்டிருக்கின்றார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களாகிய உங்களுக்காக, காடுகளில் நீரின்றி உணவின்றி உழைத்து இந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வளர்த்தவர் இன்று எதிரியின் ஊடுருவல் அணியால் அழிக்கப்பட்டுள்ளார். சிறீலங்கா இராணுவம் 3 ஆண்டுகளாக பகுதி பகுதியாக ஆக்கிரமித்த பெரும் நிலப்பகுதியை மூன்றே நாட்களில் மீட்டெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் இனிமேலும் தொடரக்கூடாது.
எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையும் தலைவரைப் பொறுத்தவரையும் இது ஒரு பெரும் இழப்பு. இந்த நிகழ்வு தமிழீழத்திற்கே ஒரு சோக நிகழ்வு. விடுதலைப் போராட்டம் இலக்கை நோக்கி வீறுநடைபோடும் நேரத்தில் இவ்வாறான சோக நிகழ்வுகள் இனியும் ஏற்படாமல் விரைந்து இலக்கை அடைய உங்களால் ஆன பங்களிப்பை கேட்டுக்கொள்கின்றேன்” என்று துயரமயமாக நின்ற தமிழீழ மக்களிடம் வேண்டுகோள் விடுத்து தனது வீரவணக்க உரையை நிறைவுசெய்துகொண்டார்.
இவருடைய இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் செல்வி சாம்பவி அவர்களின் உரை:
‘எல்லாவற்றிலுமே பங்கெடுத்து எல்லாவற்றிலுமே பங்குகொண்டு தன்னுடன் கூடிக்கழிக்கும் உற்ற நண்பனை இன்று தலைவர் பிரிந்திருக்கின்றார். ஆனால் எங்களுடைய சங்கர் அண்ணாவைப் பொறுத்தவரையில் இவ்விடுதலை இயக்கத்தில் நாங்கள் அனைவருமே அவருக்கு குழந்தைகள் போன்றவர்கள் தான். அவர் ஒவ்வொரு போராளிகளையும் அணுகுகின்ற விதம் பழகும் விதம் அறிவுரைகள் சொல்லிக்கொடுக்கும் விதம் வித்தியாசமானது. நாங்கள் சங்கர் அண்ணா என்ற பெயரை அவரை அறியும் முன்பே அறிந்திருக்கின்றோம். எப்படியென்றால் இந்திய இராணுவ காலத்தில் மணலாறில் எங்களுடைய தேசியத் தலைவர் இருந்த காலத்தில் அவரது நிழலாக இருந்தவர் சங்கர் அண்ணா.
அக்கால கட்டத்தில்தான் எமது அமைப்பில் பெருமளவான பெண் போராளிகள் இணைந்து தலைவருக்கருகில் பயிற்சிப்பாசறை அமைத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். பெண்களுக்கு காடு புதிது. காட்டிலும் பயிற்சி காவற்கடமை எல்லாமே புதிது. எல்லாவற்றையுமே பயின்று கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில் நாங்கள் போக வேண்டிய திசை எது, இடம் எது எமக்கு முன்னால் இருக்கும் மரம் எது, பக்கத்தில் இருக்கும் மரத்தின் இலை எது, விலங்குகளின் அடியைக்காட்டி அவ்விலங்கு எது என அனைத்தையும் அப்போராளிகளுக்கு அணுவணுவாக கற்றுக்கொடுப்பதுடன், அவர்கள் விடும் குறும்புகள் சிறு தவறுகளை தலைவரிடம் மிகவும் வெளிப்படையாகவே கூறுவார்.
இதனால் எங்களுடைய பெண் போராளிகள் இவரைக் கண்டாலே ஓடி ஒளித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் பழகி ஓர் தந்தையைப்போல பல சந்தர்ப்பங்களில் ஓர் தாயைப்போல எங்களுடைய போராளிகளை வளர்த்துவிட்ட பெருவிருட்சம். இன்று பல போராளிகளின் மக்களின் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. நெஞ்சு கனத்துக்கொண்டிருக்கின்றது.
‘நாங்கள் தமிழர்கள், நாங்கள் விடுதலைப் புலிகள், எங்கள் கண்களில் இருந்து வழிவது நிச்சயம் வெறும் கண்ணீராக இருக்காது. எங்கள் நெஞ்சங்களில் கனப்பது நிச்சயம் வெறும் சோகமாக மட்டும் இருக்காது. இதற்கான பதிலை எதிரி நிச்சயம் எதிர்கொள்வான். எங்கள் தளபதியின் ஆத்மார்த்தமான அந்த இலக்கினை நாங்கள் விரைவில் அடைவோம்.
அதற்காக இன்னும் எத்தனை எத்தனை இலைகளும் கிளைகளும் முறிந்து விழுந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்த மண் தயாராகவே இருக்கின்றது. இழப்புகள் என்றும் எம்மைத் துவளச்செய்துவிடாது. தூக்கி நிமிர்த்துவதும் இலக்கை நோக்கி பாயச்செய்வதும் எங்கள் மாவீரர்களின் அந்த ஆன்மாவின் பாடல்தான். இன்று வித்துடலாக உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தளபதியின் வித்துடல் மீது ஆணையாக, நாங்கள் அவர் காட்டித்தந்த பாதையில் உறுதியுடனும், திடமுடனும் விரைந்துசெல்வோம்.
அவர் எந்த இலட்சியத்திற்காக இருபது வருடங்களாக உழைத்தாரோ அந்த இலட்சியத்தை மிக குறுகிய காலத்தில் ஈடேற்றுவோம். இன்று எமது கண்களில் வடிந்துகொண்டிருப்பது வெறும் கண்ணீர் அல்ல நெருப்பு நதி” என்று தெரிவித்தார்.