தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

தியாகதீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நிறைவுநாளான இன்று யாழ். நல்லூரடியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அதேயிடத்தில் காலை 10.00மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

இவ்வஞ்சலி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நல்லூரின் தெற்கு வீதியில் அமைக்கப்பட்ட விசேட மேடையில் 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15ஆம் நாள் காலை 9.00 மணியளவில் தனது புரட்சிகரப் பயணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபன் ஆரம்பித்தார். இந்திய ஆக்கிரமிப்பு நிலவியிருந்த அன்றைய சூழலில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.

1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

மேற்படி கோரிக்கைகள் உலகின் செவிமடுத்தலுக்குள்ளாகாத நிலையில் 1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் நாள் காலை 10.48 மணியளவில் திலீபன் அவர்களின் உயிர் நம்மை விட்டு பிரிந்தது.

முப்பதாண்டுகள் கடந்த போதும் திலீபனின் கனவு நிறைவேறாது அவல வாழ்வு தொடர்கதையாகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !