தாய்லாந்து இளவரசியின் அரசியல் மோகத்தால் அரச குடும்பத்துக்குள் மோதல்!

முன்னெப்போதும் இடம்பெறாத வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் தீர்மானத்தை தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி இளவரசி உப்போல்ரட்டன ராஜகன்யா சிறிவத்தனா பர்னாவதி நியாயப்படுத்தியுள்ளார்.

இதனிடையே தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை தாய்லாந்து மன்னர் மகா வஜ்ராலங்கோன் ‘முறையற்றது’ என்று சாடியுள்ளார்.

67 வயதான இளவரசி பர்னாவதி அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும் என்று அவர் கருதுகிறார்.

“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்,” என்று மன்னர் மகா வஜ்ராலங்கோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்வது தாய்லாந்து பிரஜையாக தனக்கிருக்கும் உரிமை என்று சிறிவத்தனா பர்னாவதி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்தபோது, அவருடைய அரச பட்டங்களை அவர் துறந்தார்.

ஆனால், அரச மரியாதையை உறுதி செய்யும் கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்படும் தாய்லாந்து அரச குடும்பத்தின் மதிப்பு பெறுகின்ற உறுப்பினராகவே அவர் திகழ்ந்தார்.

இந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முன்னாள் அரசோடு தொடர்புடைய கட்சியில் போட்டியிட போவதாக சிறிவத்தனா பர்னாவதி அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்ரா கட்சியின் சார்பில் களமிறங்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

ஒரு ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக தக்சின் சினவாத்ரா கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தை விட்டு வெளியேறி டுபாயில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !