தாயுமாகிய ஜனனி அக்கா!.

தாயுமாகிய ஜனனி அக்கா!.
******-*****-*****-*****-******
தஞ்சமின்றித் தனித்துவிட்ட
வஞ்சமில்லாப் பிஞ்சுகளாம்
செஞ்சோலைக் குஞ்சுகளின்
தாய்ப்பறவை இவளல்லவோ!

நெஞ்சார நெறிகாத்து
பிஞ்சுநெஞ்சில் உரம்சேர்த்த
கொஞ்சுமொழித் தாலாட்டின்
தாய்வடிவம் இவளல்லவோ!

நஞ்சுமாலைக் கழுத்தோடும்
நெஞ்சில்கனல் நெருப்போடும்
களமுனையில் காவல்நின்ற
காவியத்தாய் இவளல்லவோ!

காலமீன்ற கன்றுகளுகளைக்
கடைசிவரைக் காவலிட்டுக்
கண்ணியமாய்க் கட்டிக்காத்த கன்னிகைத்தாய் இவளல்லவோ!

அன்னையில்லாப் பிள்ளைகளை
அன்பினோடு அரவணைத்து
அடக்கியே இறக்கைக்குள்ளாய்
அடைகாத்த அன்னையல்வோ!.

ஆதரவை இழந்து போன
அன்றில்களின் சோலையாகி
அகலக்கிளை எறிந்துநின்ற
ஆல்விருட்ச அழகல்லவோ!.

அழுத பிள்ளைக் காதரவாய்
அன்னைமடி தான்கொடுத்து
அழகுவாயில் அமுதையூட்டிய
ஆதாரத் தெய்வமல்லவோ!

தாய்மடியின் கணச்சூட்டை
பகுத்றியாப் பிஞ்சுகளை
மடிச்சூட்டில் மலரவைத்த
மகத்தான மங்கையல்லவோ!

அன்பூட்டும் அன்னையாகி
பண்பூட்டும் தந்தையாகி
அறநெறிப் போராடிநின்ற
அண்ணனவன் தங்கையல்லவோ!

அறிவொளியால் சுடரேற்றி
அறியாமை இருள் கலைத்த
அகராதி அரிச்சுவட்டின்
அவதாரக் குருவல்லவோ!.

பயங்கார வாதியென்று
பழிசொன்ன பட்டாளமே!
பத்தாண்டின் முற்காலத்தை
பகுத்தறிந்து பாருமையா!

பெற்றவரிலும் மேலாக
பக்கத்துணை யாயிருந்து
பாதுகாத்து நின்றவரையா
பயங்கர வாதியென்றீர்.

உக்கிரப்போர் உயிரெடுத்து
ஊரைவிட்டுத் துரத்துகையில்
இறக்கைக்குள் அடைகாத்து
இறுதி வரைக் காவலிட்டாள்.

பாதுகாப்பு வலையத்திலே
பக்குவங்கள் கிடைக்குமென்று
பச்சையிளம் பாலகரைப்
பாடுபட்டுப் பொத்திநின்றாள்.

பாதகர்கள் பல்குளலில்
ஏவியெறிந்த எறிகணைக்குள்
பதர்நடுவே இறக்கைவைத்து
பக்குவமாய்க் காத்துவைத்தாள்.

கூடிவாழ்ந்த குருவிக்கூண்டில்
குண்டெறிந்த குருடர்களால்!
தாய்க்குருவி திசைமாறக்
குஞ்சு வேறாய்ச் சிதறியதே!

அடியோடு குடை சாய்ந்து
ஆடியதே செஞ்சோலை.
அன்னையுனைத் தேடியின்னும்
வாடுதம்மா பூஞ்சோலை.
– நன்றி –
வன்னியூர்- வரன்
30/01/2019« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !