தான் பிறந்தபொழுது உடனிருந்த செவிலியருடன் ராகுல்காந்தி சந்திப்பு
ராகுல் காந்தி தான் பிறந்தபொழுது உடனிருந்த கேரளாவை சேர்ந்த செவிலியரை இன்று சந்தித்து பழைய நினைவுகள் பற்றி பேசினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் படுதோல்வி அடைந்த ராகுல்காந்தி, மற்றொரு தொகுதியான வயநாட்டில் அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள் பயணமாக கேரளா வந்துள்ள ராகுல்காந்தி, ரோடு ஷோ நடத்தி நன்றி தெரிவித்து வருகிறார். அவருக்கு வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே ராகுல் காந்தி பிறந்தபொழுது செவிலியராக பணியாற்றிய ராஜம்மா என்பவரை நேரில் சந்தித்தார். அப்பொழுது பழைய நினைவுகளை பற்றி ராஜம்மாவிடம் பேசினார்.
ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து ராஜம்மா கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ராகுல்காந்தி பிறந்தபோது அருகிலிருந்த செவிலியர்களின் நானும் ஒருவர், அவருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். ஆதலால் பலாப்பழத்தால் செய்யப்பட்ட சிப்ஸையும், இனிப்பையும் அவருக்கு அளித்தேன்” என கூறினார்.