தவக்கால சிந்தனை: வெள்ளிக்காசின் வலிமையும் யூதாசின் கயமையும்

வைத்திருப்பவன் கொண்டாடுகிறான். இல்லாதவன் திண்டாடுகிறான். உயிரே இல்லாத பணம்தான் உயிரை காக்கவும் பயன்படுகிறது, உயிரை எடுக்கவும் பயன்படுகிறது. இன்று மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே நிலைதான் இருந்தது என்பதை ஏசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக்காசுகள் வெளிப்படுத்துகின்றன.

ஏசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாஸ் யூதேயாவின் தென் பகுதியில் இருந்த காரியோத் என்ற ஊரினை சேர்ந்த சீமான் என்பவரின் மகன் (யோவான் 6:71) . திருத்தூதராக வாழ ஏசுவால் அழைக்கப்பட்டவர். (மத் 10:4) பணப்பையை பார்த்துக்கொள்ளும் பணியை பக்குவமாக கைப்பற்றிக்கொண்டவர். அருள்பணியை மறந்து பொருள்பணியை போற்றியவர்.

பணக்காரர் ஆவதற்கான பாதைகளைத் தேடியவர். இந்நிலையில் தான், தேவாலயத்திற்குள் நடந்துகொண்டிருந்த தன்னுடைய வியாபாரங்களை தடுத்த ஏசுவை கொல்ல திட்டம் தீட்டிய யூத மத குருவின் சூழ்ச்சிக்குள் விழுந்தார். எருசலேம் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய ஆலயத்தின் 30 வெள்ளிக்காசுகளை யூதாசுக்கு அள்ளி கொடுத்தார்.

யூதாசும் 30 வெள்ளிக்காசுகளை பெற்றுக்கொண்டு தன்னை திருப்பணிக்கு அழைத்த ஏசுவை காட்டிக்கொடுத்தார். வெள்ளிக்காசின் வலிமையினாலும், யூதாசின் கயமையினாலும் இறைமகன் ஏசு சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். தூய பவுல் அடிகளார் இதையே பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்“ (திமொத்தேயு 6:10) என்று கூறுகிறார்.

பணம் உள்ளவன் இறந்தால் மறைந்து விடுகிறான். குணம் உள்ளவன் இறந்தும் உலகில் நிலைத்து நிற்கிறான்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !