தலிபான்களுடன் சமாதான உடன்படிக்கை! – அமெரிக்கா நம்பிக்கை

தலிபான் கிளர்ச்சியாளர்களுடன் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சமாதான உடன்படிக்கை எட்டப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸல்மாய் கலிஸாத் இதனைக் கூறியுள்ளார்.

காபூலில் தங்கியுள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவர், அமெரிக்கா, தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார். ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக சமாதான உடன்படிக்கையை எட்டவுள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பிறந்தவரான குறித்த அமெரிக்க பிரதிநிதி இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில், இந்த சமாதான உடன்படிக்கையானது வெற்றிகரமான ஆப்கானிஸ்தானை உருவாக்க வழிவகுக்குமென குறிப்பிட்டார். அத்தோடு, உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்படாதென குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் 17 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் கலிஸாத் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார். தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வகையிலேயே ட்ரம்ப் நிர்வாகத்தினால் அவர் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, மேற்குலக ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தோற்கடிப்பதோடு, ஆப்கானில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு படைகளை வெளியேற்றும் முனைப்பில் தலிபான்கள் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்க தூதுவர் கலிஸாத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க துருப்புக்களை மீளப்பெற தலிபான்கள் காலக்கெடு விதித்தனர். அத்தோடு, அமெரிக்க சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலிபான் தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்ற நிபந்தனையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !