தம்பதியரிடையே பிரிவு நிரந்தரமல்ல..
தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.
தம்பதியரிடையே பிரிவு நிரந்தரமல்ல..தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமாகி பிரிவை எதிர்கொள்ளக்கூடும். பிரிவை எதிர்கொண்டாலும் அதனை நிரந்தரமாக கருதிவிடக்கூடாது. பிரிந்து சென்று விவாகரத்து வாங்கியவர்கள் கூட வாழ்க்கையில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
தவிர்க்கமுடியாத பட்சத்தில் பிரிவை எதிர்கொள்ள நேர்ந்தாலும் குறுகிய காலகட்டத்திற்குள் புதிய உறவை தேர்ந்தெடுப்பது எளிதான விஷயம் அல்ல. அந்த நபர் நல்லவரா என்பதை கண்டு அறிவதும் கடினமானது. பிரிவுக்கு பின்பு தனிமையில் வாழும் நாட்களில் துணை பற்றிய நினைவுகளும், அவருடைய குணாதிசயங் களும் நினைவுக்கு வந்து போகும். அப்போது மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் துளிர்விடும். உள்ளுணர்வு வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே துணையுடன் மீண்டும் சேர்ந்து வாழும் முடிவுக்கு வந்துவிடலாம்.
இவ்வளவு நாள் மனதுக்கு பிடித்தமானவராக இருந்தவரை சட்டென்று பிரிவது எளிதான விஷயம் அல்ல. திடீரென்று அவரது நினைவுகளை ஆழ்மனதில் இருந்து அழிக்க முடியாது. தனது துணையின் இடத்தில் வேறொருவரை நினைத்து பார்ப்பதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது.
பிரிவுக்கு பிறகும் துணையின் சமூக வலைத்தள பக்கங்களை பார்வையிடுவது, வெளியிடங்களுக்கு சென்றபோது எடுத்த போட்டோக்களை ரசிப்பது போன்ற நடவடிக்கைகள் துணையின் மீதான அன்பை அதிகப்படுத்தவே செய்யும். அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றினால் துணையுடன் மீண்டும் சேருவதற்கு முயற்சி எடுக்கலாம். மனப்பூர்வமாக நேசித்தவராக இருந்தால் அவரிடமும் இத்தகைய சிந்தனைகள் வெளிப்படும்.
வெளியே சென்றாலோ, தனிமையில் இருந்தாலோ துணையுடன் செலவிட்ட கடந்தகால நினைவுகள் அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தால் அவருடனான உறவு வலுவடைவதற்கு வித்திடும். ஏதாவதொரு வேலையை ஆர்வமாக செய்து கொண்டிருக்கும்போது துணை இருந்தால் எப்படியெல்லாம் உதவிகரமாக இருந்திருப்பார் என்ற எண்ணம் எட்டிப்பார்ப்பதும் மீண்டும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.
பிரிவை சந்தித்த பிறகு சிலர் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பது போன்று துணை முன்னால் வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் போலி புன்னகையைத்தான் வெளிப்படுத்த முடியும். வழக்கத்தை விட உற்சாகமாக இருப்பதை பார்த்ததுமே துணை புரிந்துகொள்வார். இருவருக்கும் இடையே நிலவும் ஈகோ தான் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும். மனம் விட்டு பேசினாலே மனஸ்தாபத்தை போக்கிவிடலாம்.
அவசரப்பட்டு எடுக்கும் முடிவு மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். இதயமும், மூளையும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். அவை இயல்புக்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்கும். பிரிவுக்கு பின்பு மன அழுத்தத்திற்கோ, குற்ற உணர்ச்சிக்கோ ஆளானால் இருவர் தரப்பிலும் தவறு இருப்பதாக அர்த்தம். சிறிது நேரம் பேசினாலே பிரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
பகிரவும்...