Main Menu

தமிழ் சினிமாவின் பெரும் சகாப்தம் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்ரார் என அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 69 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் 160இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிநாந்த் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் தனக்கென ஒரு இடத்தைப் பதிவு செய்துள்ளார்.

பேருந்து நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் திரைப்படத் துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் இன்றைய தலைமுறையினருக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

‘சிவாஜி ராவ் கைக்வாட்’ என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களுரில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

தன்னுடைய ஐந்தாவது வயதில் தாயை இழந்த ரஜினிகாந்த், பெங்களுரில் உள்ள ஆச்சாரியா பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கத்தில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஒரு பேருந்து நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர், பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். காலப்போக்கில், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு பயணமானார்.

ஆரம்பத்தில் பல இன்னல்களைச் சந்தித்த அவர், ஒரு நண்பனின் உதவியால் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காலப்பகுதியில், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்த ரஜினியை பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படம் சிறந்த நடிகனாக அடையாளப்படுத்தியது. இதனை தொடர்ந்து ’16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

இவ்வாறு தனது திரைத்துறைப் பயணத்தை ஆரம்பித்திருந்த அவரை ‘புவனா’ என்ற திரைப்படம் கதாநாயகனாக்கி அழகு பார்த்தது. இந்த திரைப்படமே அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியாகிய ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘முரட்டுக்காளை’ போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக தன்னை வெளிபடுத்தினார்.

இவ்வாறு நடிப்பு துறையில் கொடிகட்டிப் பறந்த ரஜனிகாந்த் தனது சொந்த வாழக்கையிலும் நாட்டம் கொண்டிருந்தார். ‘தில்லு முல்லு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ‘லதா ரங்காச்சாரியை’ முதன்முதலாக சந்தித்த அவர், 1981 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர் நடித்த திரைப்படங்களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த 100ஆவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’ திரைப்படம் அவருக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொடுத்தது. இந்தப் படத்தில் இந்து சமயப் புனிதரான ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கையை ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார் ரஜனிகாந்த்.

இதனைத் தொடர்ந்து, 1990ஆம் ஆண்டுகளில் நடித்த ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’ போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுத்தர அசைக்க முடியாத நாயகனாக, திரையுலகின் முடிசூடா மன்னாக கொண்டாடப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல், இவருக்கு இந்தியாவில் சூப்பர் ஸ்ரார் என்ற அந்தஸ்தையும் வழங்கி மக்கள் கொண்டாடினர். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ‘முத்து’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது.

இதனையடுத்து ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் வெளிவந்த ‘பாபா’ திரைப்படத்தில் மீண்டும் சினிமாவிற்குள் பிரவேசித்தார். இருப்பினும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியளிக்கவில்லை.

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சந்திரமுகி’  மற்றும் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிவாஜி’ ஆகிய திரைப்படங்கள்  நல்ல வசூலை அள்ளித்தர திரையுலகின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் ரஜினிகாந்த்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்ரைலான நடிப்பிலும், பஞ்ச் வசனங்கள் மூலமும் இரசிகர்களைக் கவரும் தன்மை கொண்ட ஒரே நடிகர் என்ற பெயரையும் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

‘இது எப்படி இருக்கு?’, ‘கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது’, கஷ்டபடாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது’, ‘சொல்றதை தான் செய்வேன், செய்றதைதான் சொல்லுவேன்’, ‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி’, ‘நா லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்’ மற்றும், ‘என் வழி தனி வழி’ ஆகிய வசனங்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி, ‘தேவர்’ விருது, ‘ஃபிலிம்பேர்’ விருது, ‘கலைமாமணி’ விருது, ‘எம்.ஜி.ஆர்’ விருது, ‘அம்பிகா’ விருது, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ விருது உள்ளிட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தனக்கென ஒரு பாதையில் ஸ்ரைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த், திரையுலகில் மட்டும் ‘சூப்பர் ஸ்ரார்’ என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அப்படியே வாழ்ந்து வருகிறார்.

பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் எளிமையான மனிதராகவே தன்னை அடையாளப்படுத்துகிறார்.

இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் எனவும் இளைய தலைமுறையினர் எத்தனை பேர் வந்தாலும் தனக்கான ஒரு இடத்தினை தக்கவைத்துக்கொண்ட மாபெரும் சாதனையாளராகவும் வலம்வரும் ரஜனிகாந்த்,  திரையுலகின் ஒரு சகாப்தம் எனலாம்.

பகிரவும்...